அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கீனன், வெடுக்குநாறிமலை மற்றும் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் விசேடமாக ஆராய்ந்ததாகவும், அதுபற்றிய அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு அவர் எதிர்பார்த்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.
வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று (மார்ச் 8 ஆம் திகதி) பூஜை வழிபாடுகளில் ஈடுபடச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதுமாத்திரமன்றி ஆலயப்பூசகர் உள்ளடங்கலாக 8 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் நடைபெற்று சில தினங்கள் கடந்ததன் பின்னர், நாட்டில் தேசிய தேர்தல்கள் நடைபெறவுள்ள பின்னணியில் அரசியல் மற்றும் மனித உரிமைகள் கள நிலைவரம் தொடர்பில் ஆராயும் நோக்கில் இலங்கைக்கு வருகைதந்த சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கீனன், வெடுக்குநாறிமலை மற்றும் குருந்தூர்மலை பகுதிகளுக்கு நேரடியாகச்சென்று பார்வையிட்டதாகவும், அங்குள்ள சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் அறியமுடிகின்றது.
அதுமாத்திரமன்றி மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் விவகாரம் பற்றியும் அலன் கீனன் பரந்துபட்ட ரீதியில் ஆராய்ந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சுமார் இரண்டு வாரங்களுக்கும் மேற்பட்ட காலம் இலங்கையில் தங்கியிருந்த அலன் கீனன், அக்காலப்பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட சில அரசியல் தலைமைகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்துக் கள நிலவரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அதன்படி வெடுக்குநாறிமலை மற்றும் குருந்தூர்மலை விவகாரங்களின் பின்னணி, அப்பகுதியில் வாழும் மக்களின் மனநிலை, இக்குழப்பங்களின் பின்னணியிலுள்ள நோக்கம் என்பன உள்ளடங்கலாக நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் வெகுவிரைவில் அவர் அறிக்கையொன்றை வெளியிடுவார் எனவும் அறியமுடிகின்றது.