கடந்த செவ்வாய்க்கிழமை 07.03.2023 அன்று டென்மார்க் வெளிவிவகார அமைச்சு மற்றும்பசுமைக்கட்சியுடனும் அரசியற் சந்திப்புகள் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய பிரதிநிதிகளினால் மேற்கொள்ளப்பட்டது. இச்சந்திப்பின் போது சிறி லங்கா அரசால் தொடரப்படும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு பற்றியும் ஏற்கனவே தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலைகளிற்கான நீதி வேண்டுமென்ற விடயமும் எடுத்துக்கூறப்பட்டது. சர்வதேச குமூகமும் தமிழ் மக்களும்சிங்கள அரசின் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில் தமிழின அழிப்பிற்கான நீதியியினை சர்வதேச நீதிப்பொறிமுறை மூலமே பெற்றுக் கொள்ளமுடியும் என்ற யதார்த்தத்தினையும் இருதரப்பும் புரிந்துகொண்டதுடன் அதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டது. பேரினவாத சிங்கள அரச ஆக்கிரமிப்பு இராணுவத்தால் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறை, காணி அபகரிப்பு , புத்த மயமாக்கல் போன்ற விடயங்களும் எடுத்துக் கூறப்பட்டது. சிறி லங்காவின் மனித உரிமை மீறல்கள் பற்றி தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றென்ற விடயம் வெளிநாட்டமைச்சகத்தால் எடுத்துரைக்கப்பட்டது.