மத்திய ஆபிரிக்க நாடான சாட்(Chad)டில் ஜனாதிபதி மாளிகை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 18 தாக்குதல்காரர்கள் கொல்லப்பட்டதோடு ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதோடு மூன்று பேர் காயமடைந்ததாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சாட் ஜனாதிபதி மஹாமத் டெபி இட்னோ, நேற்று(08.01.2025) இரவு அரண்மனைக்குள் இருந்தபோதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், நிலைமை விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள், மது மற்றும் போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள், தலைநகர் நிட்ஜமேனாவைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் என்பதால், இது பயங்கரவாத சம்பவம் அல்ல என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, இந்தத் தாக்குதல் இஸ்லாமிய போராளிக் குழுவான போகோ ஹராமின் தாக்குதல் என்ற வதந்திகள் இணையத்தில் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.