தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜும் ஊரடங்கின் போது கூடுதலாக கைத்தொலைபேசி கடையைத் திறந்து வைத்திருந்ததாகக்கூறி காவல்துறையால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் படு காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். காவல்நிலையத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில், தந்தை மகன் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கருத்து தெரிவித்தனர். இதனிடையே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த வழக்கில் விசாரணை நடத்த மேஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை நியமித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற முதல்வர் உத்தரவிட்ட நிலையில், அதுவரை சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் நேற்று மாலை, உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ், கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இன்று காலை இந்த வழக்கில் தொடர்புள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் பால கிருஷ்ணன், மற்றும் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர். பின்னர் இவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியில் இருந்த தலைமை காவலர் ரேவதி சாட்சியாக மாறியுள்ளார். இந்நிலையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரை மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோர் சாட்சியாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காவலர் முத்துராஜ் மற்றும் பால்துரை ஆகியோர் கைது செய்யப்படவில்லை. இந்த கொலை வழக்கு தொடர்பில் உள்ள காவல்துறையினர் அனைவரும் கைது செய்யப்பட்டதாக சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தகவல் அளித்துள்ளார்.