சாந்தனின் மரணத்திற்கு இந்திய இலங்கை அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்!

You are currently viewing சாந்தனின் மரணத்திற்கு இந்திய இலங்கை அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்!

சாந்தனின் மரணத்திற்கு இந்திய இலங்கை அரசுகளே பொறுப்பெற்க வேண்டும். மேலும், சாந்தனை இலங்கையிலுள்ள அவரது குடும்பத்துடன் இணைக்க பல்வேறு வழிகளில் முயன்றும் அம் முயற்சி பலனளிக்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 33 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்த பின்னர் இந்திய நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட சாந்தனை குடும்பத்தோடு உடனடியாக இணைக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் கடந்த தை மாதம் 03ஆம் திகதி கொழும்பிலுள்ள இந்திய துணைத்தூதரோடு இடம்பெற்ற சந்திப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதேவேளை, சாந்தனை உடனடியாக குடும்பத்துடன் இணைப்பதற்கும் சிகிச்சைகளை வழங்குவதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு கோரியும் கடந்த தை 29 ஆம் திகதி கடிதமொன்றை எழுதியிருந்தோம். அதேவேளை 30 ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் குறித்த விடயம் தொடர்பில் வட்சப் மூலம் கடிதமொன்றை அனுப்பியிருந்தோம்.

அதேவேளை வெளிநாட்டு இராஜாங்க அமைச்சருக்கும் குறித்த கடிதத்தை அனுப்பிவைத்திருந்தோம். ஆனால் துரதிஸ்டவசமாக அது தொடர்பில் அதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத காரணத்தினாலே சாந்தனுடைய உயிர் அநியாயமாக பிரிந்திருக்கின்றது.

அவரது சாவுக்கு இந்திய இலங்கை அரசுகள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அதேவேளை ராஜீவ் காந்தி கொலை வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கின்ற இலங்கையை சேர்ந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் தற்போதும் திருச்சி சிறப்பு முகாமிலே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் மூவரும் வெளிநாடு செல்வதற்கு விரும்புகின்றனர். அதேவேளை முருகன் இலங்கை கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்திருப்பதாக அவர்களது சட்டத்தரணி மூலம் அறியக்கூடியதாக இருந்தது. எனவே, அவர்களுக்குரிய ஆவணங்களை வழங்குவதற்கு இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை உயர்நீதிமன்றிலே வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தமிழக அரசின் சார்பில் ஆயரான சட்டத்தரணி இவர்கள் மூவரையும் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தோடு தொடர்பு கொண்டு அவர்களை இங்கே அனுப்புவது தொடர்பில் உரையாடுவதற்கு தொடர்பு கொண்டிருப்பதாகவும், ஆனால் இலங்கை அரசிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை எனவும் மத்திய அரசு சார்பிலே நீதிமன்றிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுத்து அவர்களை குடும்பங்களோடு இணைந்து வாழ்வதற்குரிய சூழல் உருவாக்கப்படவேண்டும்.

அதேவேளை அவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல விரும்பினால் அவர்கள் விரும்பும் நாட்டுக்கு செல்லுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

தொடர்ந்தும் இந்த இரு அரசாங்கங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக உயிர்கள் அநியாயமாக இழக்கப்படுவது தடுக்கப்படவேண்டும் ” என தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply