சாவகச்சேரியில் நீதிக்காக திரண்ட மக்கள்!

You are currently viewing சாவகச்சேரியில் நீதிக்காக திரண்ட மக்கள்!

சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற மக்கள் திரட்சி சில செய்திகளை சொல்லியிருக்கிறது.

கடந்த காலங்களில் தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் என்பதை அறிந்தமையினால் ஏற்பட்ட அதிருப்தியின் விளைவாக உருவானதே இந்த மக்கள் திரட்சி.

வைத்தியசாலையை வினைத்திறனாக செயற்படுத்த முயற்சித்து அவற்றை மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாற்றிவர் என்ற அடிப்படையில் வைத்தியர் அர்ஜினா இன்றைய மக்கள் போராட்டத்திற்கான அடையாளமாக மாறியிருந்தார்.

தற்போது பேச்சுவார்த்தைக்காக அவர் கொழும்பிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

“இப்போதும் நானே இந்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர்” என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் எதிர்கால விசாரணைகளும், அவர் இதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார் என்பதையும் பொறுத்தே, அவருடைய எதிர்கால செயற்பாடுகள் தீர்மானிக்கப்படும்.

ஆனால், வைத்தியர் அர்ஜினாவின் கலகம் சில உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

அதிகார துஸ்பிரயோகங்கள் – அக்கறையீனங்கள் – எமக்கேன் தேவையற்ற வம்பு என்ற மௌனங்கள், போன்றவை எம் மத்தியில் தாராளமாக இருக்கின்றது என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இளம் வைத்தியரான அர்ஜீனா, விடயக்களை கையாண்டதில் காணப்பட்ட பக்குவமின்மையும், ஆர்வக்கோளாறு ஏற்படுத்திய அவசரமும் துறைசார்ந்தவர்களினால் விமர்சிக்கப்படுகிறதே தவிர, அவருடைய முயற்சிகள் தவறானவை – பொய்யானவை என்று யாரும் கூறவில்லை.

சாவகச்சேரியில் 25 வைத்தியர்கள் கடமையாற்றுகிறார்கள்(கடமைக்காக போய் வந்திருக்கிறார்கள்) என்ற செய்தி அந்தப் பிரதேச மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. ஏனெனில் பெரும்பாலான நேரங்கள் அங்கு வைத்தியர்கள் கடமையில் இருப்பதில்லை என்பது அவர்களின் அனுபவம்!

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதனின் முகப் புத்தகப் பதிவும் பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றது.

முல்லைதீவு, மன்னார் ஆகியவற்றின் மாவட்ட வைத்தியசாலைகளில் இல்லாத பௌதீக வளங்கள் சாவகச்சேரியில் இருக்கின்றன என்பதையும், அவற்றில் புறாக்கள் குடித்தனம் நடத்தி வருவதையும் அவர் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

குறித்த வைத்தியசாலை 200 மில்லியன் ரூபாய்களை ஏப்பமிட்டுவிட்டு பயனற்று கிடக்கின்ற விபத்து மற்றும் அவசர சேவை பிரிவை செயற்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்காக கௌரவ ஆளுநரினால் அமைக்கப்பட்ட குழுவில் ஒருவனாக அங்கு சென்றபோதே அங்கிருந்த பௌதீக வளங்கள் தன்னை வியக்க வைத்தாக வைத்தியர் வினோதன் கூறியுள்ளார்.

எமது நாட்டின் சாபக்கேடுகளில் இதுவும் ஒன்று. அதாவது, ஜனாதிபதி, அமைச்சர்கள், ஆளுநர் போன்றவர்கள், ஒரு விடயத்தினை அடையாளப்படுத்தி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினால், அது தொடர்பில் கொஞ்ச நாளைக்கு அதிகாரிகள் பரபரப்பாக செயற்படுவார்கள். அறிவுறுத்தலை வழங்கிய ஜனாதிபதியோ, அமைச்சர்களோ, ஆளுநரோ, அதுதொடர்பில் தொடர் கேள்விகளை தொடுக்காவிட்டால், விடயம் அவ்வளவுதான்
– அது கிடப்பில் போய்விடும். பல்வேறு இடங்களுக்கு அமைச்சருடன் பயணிப்பவன் என்ற அடிப்படையில் நேரடியாகவே பல சந்தர்ப்பங்களில் இதனை அவதானித்துள்ளேன்.

நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான அதிகாரிகளின் இந்த பரவணிப் பண்பியலிற்கு வடக்கு அதிகாரிகள் விதிவிலக்காக இருக்க முடியாதுதானே!(அர்ப்பணிப்புடனும் சமூக சிந்தனையுடனும் உழைக்கும் அதிகாரிகள் தொப்பியை போட்டுக் கொள்ள வேணாடாம்)

இந்த விடயத்தில்கூட…, வைத்தியசாலையின் குறைபாடுகளையும் அதிகாரிகளின் பலவீனங்களையும் வெளிப்படுத்திய வைத்தியர் அர்ஜீனாவை அகற்ற வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் காட்டிய அக்கறை – தொடர் முயற்சி – நேரம் காலம் பாராத உழைப்பு – தந்திரம் போன்றவற்றின் ஒரு பகுதியை, சாவகச்சேரி வைத்தியசாலையை செயற்படுத்துதற்கு பயன்படுத்தியிருந்தாலகூட, எப்போதோ அந்த வைத்தியசாலை சிறப்பாக செயற்பட்டிருக்கும்.

எது எப்படியோ…, சாவகச்சேரியின் வைத்திய அத்தியட்சகராக அர்ஜினா நீடிக்கா விட்டாலும், அவர் சுட்டிக்காட்டிய விடயங்களை சீர்செய்ய வேண்டிய தேவை, குறித்த பதவியை பொறுப்பேற்க இருப்பவருக்கும், மாகாண அதிகாரிகளுக்கும் இருக்கின்றது. காரணம் எல்லோரது பார்வையும் குறித்த வைத்தியசாலை மீது எதிர்காலத்தில் இருக்கும்.

அந்த வகையில் வைத்தியர் அர்ஜீனா தென்மாராட்சி மக்களுக்கு நன்மையே செய்துள்ளார். அதற்கான கைமாறாகவும் மக்களின் இன்றைய திரட்சியை கருதலாம்.

அதுமட்டுமன்றி, எவனாவது ஆர்வக்கோளாறிலோ அல்லது உஷார் மடையர்களாகவோ முகப் புத்தகத்தில் Live போட்டால், சீத்துவக்கேடெல்லாம் சந்திக்கு வந்துவிடும் என்ற எச்சரிக்கை…

தவறு செய்கின்ற அல்லது கடமையை செய்யாது கதிரையை சூடாக்குகின்ற ஐயாமாருக்கு ஒரு நெருடலை ஏற்படுத்தும் வகையில் அர்ஜீனா கலகம் அமைந்துள்ளது.

அடுத்ததாக, மக்களுக்கு நன்மை செய்கின்ற அதிகாரிகளுக்கு ஆதரவாக, எந்தவித பேதங்களுமின்றி மக்கள் அணி திரள்வார்கள் என்ற செய்தி, பல அதிகாரிகளுக்கு தன்னம்பிக்கையையும், தற்துணிவையும் ஏற்படுத்தும்.

நம்மத்தியில் இருக்கின்ற பல அதிகாரிகள், சில குள்ளநரிகளுடன் மோத விரும்பாமல் ‘நமக்கேன் வம்பு’ என்று விடயங்களை சகித்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும்
பலர் இதனால் புலம்பெயர்ந்து போயிருக்கிறார்கள். என்ற கசப்பான உண்மையும் இருக்கிறது.

ஆக…, வைத்தியர் அர்ஜீனா சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற சிஸ்டத்தை புரிந்து கொண்டு, தந்திரமாகவும், பொறுமையாகவும் விடயங்களை கையாண்டிருக்கலாம் என்ற பார்வை இருக்கின்ற போதிலும்…. அவ்வப்போது சில அர்ஜீனாக்களும் தேவை என்பதையே சாவகச்சேரியில் திரண்டிருந்த பெரும்பாலான மக்களின் கருத்தாக இருக்கின்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply