சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் புதிதாக 632 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,410 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. கொரொனா பாதிப்பில் இருந்து 1,457 பேர் குணமடைந்துள்ளனர்.
புதிதாக நோய்த் தொற்றியவர்களில் 9 பேர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் என்றும், மற்ற அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் ஈஸ்வரன் கூறுகையில், “வைரஸ் தொற்று பாதிப்புள்ள நோயாளிகள் அனைவருக்கும் உரிய மருத்துவப் பராமரிப்பு வழங்கப்படும். சிகிச்சைக்கான மொத்த செலவையும் சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். சிங்கப்பூர் குடிமக்கள் பெறக்கூடிய அதே தரமான பராமரிப்பு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, சிங்கப்பூரில் 4,800 இந்தியர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 90 விழுக்காடு பேர் வெளிநாட்டினருக்கான தங்குமிடங்களில் வசித்து வருவதாகவும் அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டிருந்தது.