சிங்களவரின் பாரிய அச்சுறுத்தலில் சிக்கியுள்ள தியாகதீபம் திலீபனின் ஊர்தியும் செயற்பாட்டாளர்களும்.
தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி மட்டக்களப்பு நகரிலிருந்து வாகரையூடாக திருகோணமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது சேருவெல பகுதியில் வைத்து கல்வீசித் தாக்குவதற்கு சிங்களக்காடையர்கள் தயாராகியுள்ளார்கள் என்ற தகவல் கிடைத்த நிலையில் வெருகல் தாண்டிப் பயணிக்க முடியாத நிலையில் ஆபத்தான நிலையில் ஊர்தி வெருகலில் தரித்து நிற்கிறது.
ஊர்தியில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் சட்டத்ததரணி காண்டீபன் உட்பட10 பேர் ஆபத்தான சூழலில் சிக்குண்டுள்ளார்கள்.
முன்னதாக இன்று காலையில் களுவாஞ்சிக் குடியில் வணக்கநிகழ்வுகள் ஆரம்பமான இடத்திலிருந்து அரச புலனாய்வாளர்கள் ஊர்தியை பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
அவ்வாறு செல்லும் வழியில் காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமென தகவல் பரவியது. களுவாஞ்சிக்குடியிலிருந்து படுவான்கரையூடாக பயணித்த வாகனத்தை உளவுத்துறையினர் பின்தொடர்ந்து கொண்டேயிருந்தார்கள்.
அவர்களது சமிக்கையுடன் செயற்பட்ட ஒரு குழுவினர் மொறக்கொட்டான்சேனை இராணுவமுகாமுக்கு அருகாமையில் நின்று சிங்கக் கொடிகளை ஏந்தியவாறு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் அதனைக் கடந்து சென்றபோது வாழைச்சேனை சந்திக்கு அண்மையில் நின்ற ஒரு குழுவினர் பனர்கள் போஸ்டர்களைத் தாங்கியவாறு மாலை 6.30 மணியளவில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அவ்விடத்தைக்கடந்து ஊர்தி பயணித்துக் கொண்டிருந்தபோது அதே குழுவினர் பட்டாரக வாகனமொன்றில் ஏறி ஊர்தியை முந்திச் சென்று நாவலடியிலுள்ள பொலநறுவை-வாகரை – மட்டக்கப்பு சந்தியில் இறங்கி வீதிக்குக் குறுக்காக பனர்கள் போஸ்டர்களை பிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அந்த இடத்தைக் கடந்தும் ஊர்தி வாகரை நோக்கிப் பயணித்தபோது குறித்த அதே குழுவினர் அதே வாகனத்தில் ஏறி ஊர்தியை பின்தொடர்ந்தார்கள். ஊர்தி வாகரை மாவீரர் துயிலுமில்லம் முன்பாக தரித்து நின்றபோது ஊர்தியை கடந்து சென்றார்கள். தொடர்ந்து ஊர்தி திருகோணமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது சேருவெலவில் காடையர்குழு தாக்குதல் நடாத்தவுள்ளதாக கிடைத்த தகவலின் காரணமாக ஊர்தியும் அதில் பயணித்தவர்களும் அச்சுறுத்தலான நிலையில் வெருகலைத் தாண்டிப் பயணிக்க முடியாத நிலையில் செயற்பாட்டாளர்கள் ஊர்தியுடன் காத்திருக்கிறார்கள். இரவு ஏதும் ஆபத்து ஏற்படுமா என்ற பதற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.