திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் கடற்தொழிலாளர்களுக்கும், விஜிதபுர பகுதி சிங்கள கடற்தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று மதியம் பாரிய மோல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஒரு தரப்புக்குச் சொந்தமான கடல் பகுதியில் மற்றொரு தரப்பு மீன்பிடியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்ததனால் முறுகல் நிலை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் திருக்கடலூர் இளைஞர்கள் வருடாந்தம் சித்திரை விழாவை ஒட்டி விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வழமையாகும்.
எனினும் இவ்வருடம் போட்டிகளை நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விஜிதபுர, திருக்கடலூர் கிராமத்தை ஒட்டிய பகுதியில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதியில் சிங்கள கிராம மக்களின் ஒப்புதலுடன் விளையாட்டு போட்டிக்கு நிதி சேகரிக்க, மீன்பிடிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
எனினும் இது தெரியாத சிங்கள கடற்தொழிலாளர்கள் சிலர் தமிழ் கடற்தொழிலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்தே இது இரு தரப்பினருக்கு இடையிலான மோதாக மாறியுள்ளது.
இரு தரப்பினரும் பொல்லுகள், தடிகள் கொண்டு தாக்கிக் கொண்டனர். கல்வீசியும் தாக்குதல் இடம்பெற்றதுடன் வீடுகளுக்குள் புகுந்தும் தாக்குதல் நடத்தப்பட்டதாக பரஸ்பரம் குற்றஞ்சாட்டப்பட்டது.
இச்சம்பவத்தில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன