இன்றைய நவீன உலகிலும் இனவாதத்தின் தந்தை தான்தான் என்பதை அமைச்சர் விமல் வீரவன்ச மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.மன்னாரில் அமைந்துள்ள பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் மும்மொழிப் பலகையில் முதன்மையாக இருந்த தமிழ் மொழியை மாற்றி சிங்கள மொழிக்கு முதன்மை இடம் கொடுத்தமை தொடர்பாக இன்று (21) வேலுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் மேலும்,திரை நீக்கம் செய்யப்பட்ட பெயர்ப் பலகையில் தமிழ் மொழியே முதலில் இருந்தது. இதனைகண்டு கொதிப்படைந்த விமல் வீரவன்ச குறித்த பெயர் பலகையை உடன் நீக்கிவிட்டு, சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.இதன்படி தற்போது தமிழர் தாயகத்தில் தமிழ் மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வழமையாக வாக்குவேட்டைக்காக சிங்கள, பௌத்த மக்களின் மனங்களில் இனவாதத்தை விதைத்து, அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் விமல் வீரவன்ச, தனது சண்டித்தனத்தை வடக்கிலும் காட்ட ஆரம்பித்துள்ளார்.
அவரின் இந்த குரோதச்செயலை ஒருபோதும் நாம் அனுமதிக்கமாட்டோம். வன்மையாகக் கண்டிப்பதுடன் இது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்புவோம். இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் அரசியலமைப்பில் தமிழ் மொழியும் அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாக தமிழை பயன்படுத்துவதற்கும் சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.எனவே, இவ்விரு மாகாணங்களிலுள்ள அரச திணைக்களங்கள், நிறுவனங்களில் தமிழுக்கு முன்னுரிமை வழங்குவதே ஏற்புடைய நடவடிக்கையாகும்.
கடந்தகாலங்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டுவந்தது. இந்நிலையிலேயே தமிழ் பேசும் மக்களுக்கு அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்ட உரிமைகளைக் கூட கோத்தாபய தலைமையிலான அரசாங்கம் பறிக்க முற்படுகின்றது.சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடை போட்டவர்கள் தற்போது தமிழ் மொழியில் பெயர் பலகை வைப்பதற்கும் வேட்டு வைத்துள்ளனர்.
தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என செல்லும் இடங்களிலெல்லாம் ஒப்பாரி வைக்கும் ராஜபக்ஷ சகோதரர்களும், அவர்களின் சகாக்களும், தமிழ் பேசும் மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்பதை ஆராய்வதில்லை.விமல் வீரவன்ச போன்ற இனவாதிகளை ஏவிவிட்டு தமிழ் மக்களை ஒடுக்குவீர்கள் என்ற அச்சத்தாலேயே மாற்று சக்திக்கு வாக்களித்தனர்.
மக்கள் நினைத்தது சரி என்பதையே தற்போதைய சம்பவங்கள் நிரூபித்துவருகின்றன. அன்று பண்டாரநாயக்க அரசாங்கத்தால் தனி சிங்கள மொழி சட்டம் திணிக்கப்பட்டதால் தான் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கின. தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு வழிவகுத்த காரணிகளுள் இதுவும் ஒன்றாகும்.எனவே, மீண்டும், மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படாமல், நாட்டில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தி இலங்கையர்களாக முன்நோக்கி பயணிப்பதற்கான சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் – என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைச்சர் மனோகணேசன் கருத்து தெரிவிக்கையில்
அமைச்சர் விமல் வீரவன்ச அரசியலமைப்பு பற்றிய அறிவற்ற முட்டாள் இனவாதி என்று மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.மன்னாரில் அமைந்துள்ள பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் மும்மொழிப் பலகையில் முதன்மையாக இருந்த தமிழ் மொழியை மாற்றி சிங்கள மொழிக்கு முதன்மை இடம் கொடுத்தமை தொடர்பாக தனது முகநூலில் வெளியிட்ட பதிவில் இதனை தெரிவித்துள்ளர். மேலும்,அரசியலமைப்பு முன்வைக்கும் சட்ட உள்ளார்த்தத்தை மீறியதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பு பற்றிய அறிவற்ற ஒரு முட்டாள் இனவாதி என்று தன்னைத்தானே அடையாளம் காட்டியுள்ளார் – என்றார்.