சிங்கள மொழி பிறக்க முன்னரே சைவத் தமிழர் இலங்கையில் இருந்தனர் –சி.வி.விக்னேஸ்வரன்

  • Post author:
You are currently viewing சிங்கள மொழி பிறக்க முன்னரே சைவத் தமிழர் இலங்கையில் இருந்தனர் –சி.வி.விக்னேஸ்வரன்

சிங்கள மொழி பிறப்பதற்கு முன்னரே சைவத் தமிழ் மக்கள் இலங்கையில் இருந்தனர் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் துட்டகைமுனுவைச் சிங்களவர் என்று அடையாளம் காட்டுவது எந்த முறையிலே சரி என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் ஊடகவியலாளரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘இலங்கை சிங்கள தேசம்’ என்ற கருத்து தென்பகுதியில் வலுப்பெற்று வருகின்றது. அப்படியாயின் தமிழரின் இடம் எதுவென நீங்கள் நினைக்கின்றீர்கள்? என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “இலங்கை, சைவத் தமிழ் மக்களுக்கே உரியது. புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே சைவத் தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளார்கள்.
முதலில் பௌத்தத்திற்கு மாறியவர்களும் அவர்களே. சிங்கள மொழி அப்போது பிறந்திருக்கவில்லை. கி.பி. 6ஆம், 7ஆம் நூற்றாண்டுகளில் தான் சிங்களம் என்பது ஒரு மொழியாகப் பரிணமித்தது.

ஆகவே அந்த மொழி வருவதற்கு முன்னர் இலங்கையில் சிங்களவர் இருக்கவில்லை. சுமார் 1300 அல்லது 1400 வருடங்களாகத்தான் சிங்களம் ஒரு மொழியாக பேசப்பட்டு வருகின்றது.

அதற்குமுன்னர் தமிழ் மொழியுடன் பாளிமொழி இருந்தது. துட்டகாமினி ஒரு பௌத்த தமிழன். எல்லாளன் ஒரு சைவத் தமிழன். அந்தக் காலத்தில் சிங்களமொழி இருக்கவில்லை. ஆகவே துட்டகைமுனுவைச் சிங்களவர் என்று அடையாளம் காட்டுவது எந்த முறையிலே சரி என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

கடந்த வியாழன் அன்று ஊடகவியலாளரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள