சிரியாவில் அமெரிக்க துருப்புகள் தங்கும் வசதிகள் மீது நடத்தப்பட்ட இரண்டு அடுத்தடுத்த ராக்கெட் தாக்குதலில் சேவை உறுப்பினர்கள் சிலர் காயமடைந்து இருப்பதாக அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு சிரியாவின் கோனோகோ மற்றும் கிரீன் வில்லேஜ் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க துருப்புகளின் கட்டமைப்பு மீது புதன்கிழமை பிற்பகல் அடுத்தடுத்த இரண்டு ராக்கெட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதில் சிலர் சிறியளவு காயமடைந்து இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டமைப்பு அல்லது உபகரணங்கள் எதுவும் சேதம் ஏற்பட்டதா என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
இந்த தாக்குதலுக்கு பின்னணியில் எந்த தீவிரவாத அமைப்பு உள்ளது என இதுவரை தெரியவில்லை, ஆனால் முன்னதாக புதன்கிழமை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையுடன் இணைந்த குழுக்களின் உள்கட்டமைப்புகளில் அமெரிக்கா படையினர் வான்வழியாக பதிலடி தாக்குதல் நடத்தினர்.
அமெரிக்கா தங்களது அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் நடத்திய பதிலடி தாக்குதலில், ராக்கெட் வீசியதற்குக் காரணமானவர்கள் என்று நம்பப்படும் பலர் கொல்லப்பட்டதாக அறிவித்தனர்.
மேலும் ஜனாதிபதி ஜோ பைடனின் வழிகாட்டுதலின் பேரில் இந்த பதிலடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய கட்டளையின் தகவல் தொடர்பு இயக்குனர் கேணல் ஜோ புசினோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிரியாவின் உள்ளூர் நேரப்படி இரவு 7:20 மணியளவில் தொடங்கிய ராக்கெட் தாக்குதல் முதல் அமெரிக்க படையின் பதில் தாக்குதல் வரை முழு சம்பவமும் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது.