தமிழ்முரசத்தின் 26 வது ஆண்டு பொன்மாலைப்பொழுது மண்டபம் நிறைந்த மக்களின் ஆதரவோடும் கலைஞர்களின் கலையாற்றலோடும் மிகச்சிறப்பாக நடைபெற்றது
மண்ணின்விடுதலைக்காக வித்தாகிய மாவீரர்களும் மக்களுக்கும் வணக்கம் செலுத்தி ஆரம்பமாகிய பொன்மாலைப்பொழுது நிகழ்வில் தாயகத்திலிருந்து வருகை தந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திருமிகு கயேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமகாலத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் அரசியல் ஆபத்தினை விளக்கியிருந்ததோடு தமிழ்த்தேசியத்தின் போர்வையில் இயங்கும் ஊடகங்களின் ஆபத்தான செயற்பாடுகளையும் எடுத்துரைத்திருந்தார்.
பொன்மாலைப்பொழுதுதின் மகுடமாக இடம்பெற்றுவரும் பாடல்போட்டி நிகழ்வும் மிகச்சிறப்பாக நிகழ்ந்தேறியது இந்நிகழ்வில் இளஞ்செல்லக்குயில்கள், செல்லக்குயில்கள், வானம்பாடிகள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.
இப்பிரிவுகளில் பாடிய போட்டியாளர்கள் கடுமையான போட்டியினை கொடுத்து வந்திருந்த மக்களை பரவசப்படுத்தியிருந்தனர் என்றால் அது மிகையாகாது.
இப்போட்டிகளில் இளஞ்செல்லக்குயில் பிரிவில் சான்சிகா சிறீகுமார் வெற்றியை தனதாக்கிக்கொண்டார், செல்லக்குயில் பிரிவில் ப்ரீத்தி கிருஸ்ணசாமி வெற்றியை தனதாக்கிக்கொண்டார், வானம்பாடிகள் பிரிவில் மயூரி முரளிதரன் வெற்றியை தனதாக்கிக்கொண்டார், மிகக்குறைந்த புள்ளிகளில் வெற்றியாளர்கள் வெற்றிகளை ஈட்டிக்கொண்டாலும் அனைவரும் சிறப்பாக பாடி மக்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளார்கள் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமிருக்க முடியாது அந்தளவிற்கு தங்களின் பாடும் திறனை வெளிப்படுத்தியிருந்தனர்.
இம்முறை பொன்மாலைப்பொழுதில் தமிழீழக்கலைஞர் விருது திருமதி மனோகரி சத்தியசீலன் மற்றும் பண்ணாகத்து பண்டிதர் விவேகானந்தன் ஆறுமுகம் இருவருக்கும் தமிழ்முரசத்தால் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டுள்ளது வாழுங்காலத்தில் தாயகத்திற்காகவும் சமூகத்திற்காகவும் கலை இலக்கிய வழி நெறி பிறழாது பணியாற்றிக்கொண்டிருப்பதற்காக தமிழ்முரசத்தால் மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
பொன்மாலைப்பொழுது நிகழ்வில் நல்வாய்புச்சீட்டிழுப்பு நடாத்தப்பட்டிருந்தது அதில் முதல் பரிசை தட்டிச்வென்றவர்455 என்ற இலக்கமுடைய ரிசி அவர்கள், இரண்டாம் பரிசை தட்டிக்கொண்டார் 558 இலக்கங்களை கொண்ட தேவி அவர்கள், மூன்றாம் பரிசை தனதாக்கிக்கொண்டார் 26 இலக்கமுடைய நாதன் அவர்கள், அனைவருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பொன்மாலைப்பொழுது நிகழ்வு சிறப்பாக நடைபெற அனைத்து வழிகளிலும் உதவிய அனைவருக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.