சிறிலங்காவின் அதிபர் தேர்தலைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழர்  ஒருங்கிணைப்புக் குழு – பெல்சியம்

You are currently viewing சிறிலங்காவின் அதிபர் தேர்தலைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழர்  ஒருங்கிணைப்புக் குழு – பெல்சியம்

சிறிலங்காவின் அதிபர் தேர்தலைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். 

பொருளாதார நெருக்கடிகள், பணவீக்கம்,வெளிநாட்டுக் கடன்கள், வேலையின்மை, ஊழல் மோசடிகளென மீளமுடியாத நிலையில், சிறிலங்கா மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது, சர்வதேசத்திடம் கையேந்தி நிற்கும் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ம் நாள் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் 39 வேட்ப்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.

இது சிறிலங்கா பௌத்த தேசத்திற்கான தேர்தல். எப்படித்தான் தலைகீழாக செயற்பட்டாலும் சிங்களப் பௌத்தர் ஒருவரே அந்நாட்டின் அதிபராக வரமுடியும். கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக, சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசுகளால் அடக்கியாளப்பட்டு வரும் ஒற்றையாட்சி அரசாங்கத்தின் சனாபதியைத் தேர்வு செய்யும் தேர்தலில் நாம் ஏன் வாக்களிக்க வேண்டும். தமிழினம் மீது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை மேற்கொண்டு வரும் சிறிலங்காவின் ஆட்சியாளர்களை தமிழர் தேர்வு செய்யமுடியுமா? அவ்வாறு சிறிலங்கா சிங்கள சனாபதிக்கு வாக்களித்து, தொடர்ந்தும் சிங்கள அரசு தமிழின அழிப்பை மேற்கொள்ள நாமும் உடந்தையாக நிற்கப்போகிறோமா? தமிழினம் விழிப்போடு சிந்திக்க வேண்டிய காலம்!

அத்தோடு, இந்திய அரசு தமது எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் தமிழ் பிரதிநிதிகளைத் தூண்டிவிட்டு பொது வேட்பாளர் ஒருவரை களத்தில் நிறுத்தி, தமிழினத்தை அரசியல் அநாதைகளாக ஆக்கி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை நீர்த்துப்போகச்செய்து, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அத்திவாரத்தை தகர்க்க களமிறங்கியுள்ளது. 2009 ஆண்டிற்குப் பின்னரான, 15 ஆண்டுகளில் தமிழின அழிப்பிற்கு எதிராகவோ அன்றி ஆக்கிரமிப்புகள் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட திராணியற்ற தரப்புகள் இணைந்து பொதுக் கட்டமைப்பினை நிறுவி, பொது வேட்பாளரைக் களமிறக்கி பெருந்தொகை நிதியை வீண்டித்து தமிழர்களை ஏமாற்ற வீதியில் இறங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒற்றையாட்சிக் குதிரையில் பயணித்தவர்களே. தொடர்ந்து அவ்வாறு பயணிக்கவுள்ளவர்கள் என்பதிலும் ஐயமில்லை.

அத்தோடு, தமிழனினத்தை வேரோடு கருவறுக்க துடிக்கும் இனவாத சித்தாந்தத்தைக் கொண்டவர்களுக்கு நிபந்தனை அடிப்படையில் ஆதரவு வழங்க வேண்டுமென்று நினைப்பதே தமிழினத்துக்குச் செய்யும் துரோகம் ஆகும். இந்நிலையில், தமிழர்களுக்கு ஒரே ஒரு தெரிவுதான், தமிழர்களுக்கு எந்தவகையிலும் உதவாத சிறிலங்கா அதிபர் தேர்தலை முற்றாகவே புறக்கணிப்பதே அத்தெரிவாகும்.

அன்பிற்குரிய உறவுகளே!

எதிர்வரும் சிறிலங்காவின் அதிபர் தேர்தலை புறக்கணித்து தொடர்ந்தும் எமது தேசத்திற்கான வேணவாவை சர்வதேசத்திற்கு பறைசாற்றுவதோடு, சிங்கள பௌத்த மேலாண்மை வேட்பாளர்களுக்கும் தெளிவான செய்தி சொல்லும் எமது வரலாற்று கடமையை ஆற்ற நாம் உறுதி கொள்ளவேண்டும்.

தேர்தல் புறக்கணிப்பு என்பது தனியே ஒரு கட்சிக்கோ அல்லது தனி நபருக்கோ உரித்தான கொள்கை அல்ல. மாறாக தமிழீழத்தேசியத்தலைவரின் உறுதியான நிலைப்பாடும் இதுவேயாகும். உலகளாவிய ரீதியில் பல ஒடுக்கப்பட்ட இனமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஒரு சனநாயக செயல்முறையே என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

ஓரணியாய் நின்று சிறிலங்கா சனாபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழர்  ஒருங்கிணைப்புக் குழு – பெல்சியம் உங்களை வேண்டிநிற்கிறது.

 

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

சிறிலங்காவின் அதிபர் தேர்தலைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழர்  ஒருங்கிணைப்புக் குழு - பெல்சியம் 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments