இலங்கையில் ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதுடன், முக்கியமான தகவல்களை சேகரித்து வெளியிடும்போது துன்புறுத்தல், அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக ஊடகவியலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆர்ப்பாாட்டங்கள் குறித்து செய்திகளைச் சேகரிக்கும்போது அரசாங்கள் வாகனங்களில் வந்த அதிகாரிகள் தங்களைக் கண்காணித்ததாக ஊடகவியலாளர்கள் குற்றஞ்சாட்டுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ஊடக சுதந்திரத்தை உள்ளடக்கிய கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்ற பத்தியின் கீழ் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் அரசியலமைப்பு ஊடக சுதந்திரத்தை உள்ளடக்கிய கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. ஆனால் அரசாங்கம் சில நேரங்களில் இந்த சுதந்திரங்களை கட்டுப்படுத்தியது.
சுயாதீன ஊடகம், செயலூக்கமான நீதித்துறை மற்றும் ஜனநாயக அரசியல் அமைப்பு ஆகியவை இணைந்து பத்திரிகை சுதந்திரம் உள்ளங்கிய கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்துகின்றன.