சிறிலங்காவில் விரைவில் இராணுவ ஆட்சி மலரும்!

You are currently viewing சிறிலங்காவில் விரைவில் இராணுவ ஆட்சி மலரும்!

சிறிலங்காவில் மிகவிரைவில் இராணுவ ஆட்சி மலரும் என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இதற்கான அடித்தளத்தை அமைத்திருக்கிறார் என்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார். 

கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்-

ராஜபக்சவினரது நோக்கத்தை நிறைவேற்றவே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சில சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அதற்காக கட்சிக்குள் எவரும் இடமளிக்கக் கூடாது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, கடந்த 107 நாட்களாக நாட்டைப் பிரச்சினைக்குள் சிக்கவைத்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார். ஒரு புறம், குறுகிய காலத்துக்குள் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேச உறவுகளை முழுமையாக இல்லாதொழித்து, இந்த நாட்டின் தமிழ், சிங்கள மக்களை ஒன்றிணைப்பதற்கான செயற்பாடுகளை ஜனாதிபதி புறந்தள்ளியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச கடந்த தேர்தல் காலத்தில், அவர் சார்பானவர்களுக்கே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், இராணுவ ஆட்சியொன்றை நாட்டில் உருவாக்குவதற்கான திட்டங்களை முன்னெடுக்கின்றார்.

அதனைத் தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான ஓர் அபாயமான நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில், அதிலிருந்து மீளும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து, இராணுவ ஆட்சியை இல்லாதொழிப்பது அவசியமாகும்.

இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக அனைத்து அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைமை வகிக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் கீழ் சஜித் பிரேமதாஸவை பிரதமர் வேட்பாளராகவும், கூட்டணியின் தலைவராகவும் தெரிவு செய்து செயற்படுகின்ற நிலையில், சில தரப்பு ராஜபக்ச தரப்பின் நோக்கத்தை நிறைவேற்ற செயற்படுகின்றது.

ஆகவே, நாம் விசேடமாக இதனை எதிர்க்கக்கூடிய ஒரு அமைப்பை பலப்படுத்த வேண்டுமெனின், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும்.

ஒற்றுமையைப் பலப்படுத்துவது எனப்படுவது யாரையும் விரட்டுவது அல்ல, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவசியம்; அதேபோல் இந்த நாட்டு மக்கள் கோரும் சஜித் பிரேமதாசவும் அவசியம்.

அதனைவிட அனைத்துத் தரப்பினதும் ஒத்துழைப்பு அவசியம். இந்த நாட்டின் மரபுரிமையே ஐக்கிய தேசியக் கட்சி. ஆகவே, பிரிந்து செல்லாது, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

மக்கள் சின்னத்தைப் பார்த்து வாக்களிப்பதில்லை. அந்தச் சின்னத்தைக் கொண்டுள்ள தரப்பின் கொள்கை மற்றும் நபர்களுக்கே மக்கள் வாக்களிக்கின்றனர். மக்களை ஏமாற்றும் ராஜபக்ச ஆட்சியை தோற்கடிக்க நாம் ஒன்றிணைய வேண்டும் – என அவர் மேலும் கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள