பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, பலவருடகாலம் தண்டனையை அனுபவித்த சிறைக்கைதிகளைப் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்வதன்மூலம் சர்வதேச பங்காளிகளைத் திருப்திப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச சமூகமும் இலங்கை அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளையும் அலங்கரிக்கப்பட்ட வரவேற்புக்களையும் நம்பி அமைதியடைந்துவிடக்கூடாது.
மாறாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்துவதற்கான வலுவான அழுத்தத்தை வழங்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இரத்தினக்கல், தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச்சென்று, அங்கு தமிழ் அரசியல்கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை மண்டியிடச்செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.