சிறிலங்கா நாடாளுமன்றில் முழங்கிய விக்கினேஸ்வரன்!!

You are currently viewing சிறிலங்கா நாடாளுமன்றில் முழங்கிய விக்கினேஸ்வரன்!!

இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு  சரியான மருந்து சமஷ்டி முறைமையே ஆகும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்திருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ  இந்த நாட்டில் நிலையான சமாதானத்தையும்  சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு மிகவும் நீண்ட காலத்தின் பின்னர் பொன்னான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அதனை தவறவிட்டுவிட வேண்டாம் என தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.  

யுத்தத்தை வெல்வது இலகுவானது. ஆனால், சமாதானத்தை வெல்வது கடினமானது. சமாதானமே நிரந்தரமான வெற்றியை ஏற்படுத்தவல்லது எமக்கான அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் தாருங்கள். நாம் ஏனையோருடன் இணைந்து இந்த நாட்டை அமைதியும் செழிப்பும் மிக்கதாக ஆக்குவோம் எனவும் அவர் சபையில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலக் கணக்கறிக்கை பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

கடந்த வாரம்  நான் பாராளுமன்றத்தில் பேசிய விடயங்கள் குறித்து சில விமர்சனக் கருத்துக்கள் எழுந்துள்ளது. சில  நாட்களுக்கு முன்னர் நான் ஒரு மூத்த, மதிப்புக்குரிய சிங்கள அரசியல்வாதியை சந்தித்தேன். அவர் எனது உரைகள் குறித்த முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டார். எனது உரைகள் வசை பாடுவதாகவோ அல்லது புண்படுத்தும் வகையிலோ அமையவில்லை என்று கூறினார். அவரது ஆலோசனைக் கருத்துக்களை நான் மதிக்கின்றேன். நான் எவரையும் வெறுப்பதில்லை. ஆனால் நான் உண்மையை விரும்புகின்றேன். சில வரலாற்று உண்மைகளை படித்தபின்னர் எமது கடந்தகாலம் குறித்து சில முடிவுகளுக்கு நான் வந்துள்ளேன். 

எனது முடிவுகளில் தவறு இருந்தால் மற்றவர்கள் சுட்டிக்காட்டலாம். மாறாக, குழப்பம் அடைந்து என்னைத் தூற்றி பொது விவாதத்துக்கு என்னை அழைப்பதன் மூலம் ஒரு உண்மை பொய்யாகவோ அல்லது ஒரு பொய் உண்மையாகவோ ஆகிவிடாது. 

தேவை ஏற்பட்டால், எமது வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவை தொடர்பில் அறிவுகொண்ட சிறந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் சர்வதேச ரீதியான வரலாற்று ஆய்வாளர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றை  நாம் அமைக்கலாம்.  

இதுவரை காலமும் எமது சிங்கள சகோதரர்களுக்கு பிழையான தகவல்களை வழங்கிவந்த போலி வரலாற்று ஆய்வாளர்களை விடுத்து சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டவர்களாக இந்த வரலாற்று ஆய்வாளர்கள் இருக்க வேண்டும்.

 நான் முதலமைச்சராக இருந்தபோது சிங்களவர்களும் முஸ்லிம்களும் வடக்கில் வடக்கிற்குள் நுழைவதற்கு நான் தடை விதித்ததாகக் கூறினார் .  எனது இரண்டு பிள்ளைகளும் சிங்களவர்களை திருமணம் முடித்திருக்கும் நிலையில் நான் அப்படிக் கூறியிருந்தால் உண்மையில் நான் ஒரு பிசாசாக இருக்கவேண்டும். 

இத்தகைய வெறுப்பூட்டும், இனவாத செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. நான் அப்படிக் கோரிய ஏதாவது பதிவுகள் இருப்பின் பார்க்க விரும்புகின்றேன். ஆனால், உள்ளூர் மக்களுக்கான முன்னுரிமையை வலியுறுத்தும் சர்வதேச சட்டத்துக்கு முரணாக மகாவலி குடியேற்றங்களில் வெளியிட மக்களைக் கொண்டுவந்து குடியமர்த்துவது தவறு என்று நிச்சயமாக நான் கூறியிருப்பேன்.

அதேபோல் நான் நோயாளிகளுக்கு இரத்த தானம் செய்திருந்தேனா என்றும்  யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மட்டுமே இரத்த வங்கிகளுக்கு இரத்தம் வழங்குவதாகவும்  உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார். ஏனைய சாதியினரிடம் இருந்து வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரத்தம் பெற்றுக்கொள்வார்களா என்றும் குறித்த உறுப்பினர் கேட்டிருந்தார். 

ஆனால், இராணுவம் யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு முன்னரும் அதற்கு பின்னரும் வட மாகாண மக்கள் இரத்த வங்கிகளுக்கு இரத்த தானம் செய்துள்ளனர் என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.   எல்லா இரத்தமும் நான்கு வகைகளுக்கு மட்டும் உரியவை என்பதை எம் மக்கள் அறிவார்கள்.

மக்களின் நன்மை சார்ந்த சில செயற்திட்டங்களை செய்விப்பதன் மூலம் இராணுவத்தினரின் மனோபாவத்தை மாற்றப்போவதாக மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க என்னை முதலில் சந்தித்தபோது கூறியதை நினைவுறுத்துகின்றேன். 

இராணுவத்தினர் இரத்தம் கொடுப்பது அநேகமாக அவரின் சிபாரரிசாக  தான் இருந்திருக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் வீரசேகர அவர்கள், படையினரின் மனிதாபிமான செயல்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது. வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி கொடுக்கப்பட்டால், ஏனைய பகுதிகளில் வாழும் நாட்டின் 60 சத வீதத்தை கொண்ட தமிழர்களின் நிலை என்ன? என்று அவர் வெகுளித்தனமாக கேட்டார். நாம் பிரிவினையை கோரவில்லை என்பதை அவர்  புரிந்துகொள்ள வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே சமஷ்டி.  

மேலும் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இந்த இடைக்கால கணக்கறிக்கை  தொடர்பில் அதிகம் கூறிக்கொள்வதற்கு எதுவும் இல்லை.  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவும் வகையில் என்றைக்கும் எந்த அரசாங்கமும்  நிரந்தர பொருளாதார நலன்களை எமது மக்களுக்கு வழங்கவில்லை. அதேபோல, தமது பொருளாதார பிரச்சினைகளை கையாளுவதற்கான பொருளாதார அதிகாரமும் எமது மக்களின் கைகளில் இல்லை. சட்ட ரீதியான முதலமைச்சர் நிதியங்கள் கூட வடக்கு, கிழக்கு மாகாண  சபைகளுக்கு மறுக்கப்பட்டன. அதனால், இன்றைய இந்த விவாதத்தில் எமது மக்களுக்கான நிலையான பொருளாதார வாய்ப்புக்களையும் வழிகளையும் ஏற்படுத்துவதற்கான அடிப்படை விடயமான இனப்பிரச்சினை தீர்வு பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துகொள்வது பொருத்தமானது என்று கருதுகின்றேன்.  

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்திருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ  இந்த நாட்டில் நிலையான சமாதானத்தையும்  சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு மிகவும் நீண்ட காலத்தின் பின்னர் பொன்னான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.  “ஒருமித்த” நாட்டுக்குப் பதிலாக “ஐக்கிய” நாட்டை கட்டியெழுப்புவதன் மூலம், 10 ட்ரில்லியன் சர்வதேச கடன் இருக்கின்றபோதிலுங் கூட, இந்த நாட்டை  இந்த உலகின் சொர்க்க பூமியாக உங்களால் மாற்ற முடியும். 

இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு  சரியான மருந்து சமஷ்டி முறைமையே ஆகும். தயவுசெய்து இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள். நாம் எல்லோரும் ஒன்றிணைந்து இனப்பிரச்சினையை எதிர்கொள்வோம்.  உங்களின் இந்த பொறுப்பை தட்டிக்கழித்து அதனை எமது வருங்கால வாரிசுகளிடம் விட்டுவிடாதீர்கள். யுத்தத்தை வெல்வது இலகுவானது. ஆனால், சமாதானத்தை வெல்வது கடினமானது. சமாதானமே நிரந்தரமான வெற்றியை ஏற்படுத்தவல்லது.  

இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்றும் பொருளாதார பிரச்சினை மட்டுமே இருக்கின்றது என்றும் கூறிவரும் உங்களில் சிலரின் விதண்டாவாதத்தை தயவுசெய்து விட்டுவிடுங்கள்.  சுதந்திரத்துக்கு பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு கட்சிகளுமே இனப்பிரச்சனை இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன.  சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டன.   யுத்த நிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட கால இன முரண்பாட்டின் ஒரு இடை வெளிப்பாடாகவே விடுதலைப்புலிகள் தோன்றினார்கள். இன்று  விடுதலைப்புலிகள் இல்லை என்ற காரணத்துக்காக இனப்பிரச்சினை இல்லை என்று ஆகிவிடாது. நாம் ஏன் பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரத்துக்காகப் போராடினோம்? பிரித்தானிய இலத்தீன் போது அமைதியுடனும் செழிப்புடனும்  இருந்தோம். உண்மையில், லீ குவான் யூ சிங்கப்பூரை மற்றொரு சிலோனாக மாற்றுவதாக உறுதிபூண்டிருந்தார். பிரித்தானியர்களின் கீழ் அந்தளவு அமைதியும் வளமும் உள்ள நாடாக இலங்கை இருந்தது. ஆனால் அவ்வாறு இருந்தும் நாம் சுதந்திரத்துக்காகப் போராடினோம். ஏன்? எம்மை உருவாக்கிய எமது மொழி, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை உயிர்ப்பாக வைத்திருப்பதற்காகவே நாம் பிரித்தானிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட முடிவெடுத்தோம்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் சரியாக இதேபோன்ற இக்கட்டான ஒரு நிலையில் தான் இருக்கிறார்கள். நாம் சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் கீழ் இன்று இருக்கின்றோம். இந்தியாவில் மகாத்மா காந்தி ஒரு வழியில் எமக்கான சுதந்திரத்தையும் பெற்றுக்கொடுத்ததால் நாங்கள் பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு ஆயுதங்களை ஏந்த வேண்டி இருக்கவில்லை.  ஆனால், சிங்கள பௌத்த அரசாங்கத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுபடுவதற்கு எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்த  வேண்டி இருந்தது. வடக்கு கிழக்கின் அரசியல், சமூக வரையறைகளை நான் நன்கு அறிவேன். நாடு முழுவதிலும், நீதித்துறையில் பணியாற்றியபின்னர், வட மாகாண சபையின் நிறைவேற்று முதலமைச்சராக சேவையாற்றுவதற்கு அழைக்கப்பட்டேன். இப்பொழுது நான் நாடு முழுவதுக்குமான சட்டவாக்கவாளர்கள் குழுவின் ஒரு உறுப்பினர். ஆகவே, எனது 80 வருட கால வாழ்க்கையில் அரசாங்க இயந்திரத்தின் மூன்று பகுதிகளிலும் நான் பணியாற்றி இருக்கின்றேன். எனது இந்த நீண்ட பயணத்தில்  புற அலகுகள் மீதான மத்திய அரசாங்கத்தின்  ஆதிக்கம் காரணமாக உள்ளார்ந்த ஏற்பட்ட குறைபாடுகளை நான் அறிவேன்.

தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும் பொருளாதார சலுகைகளையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் சிலர் கூற விழைந்துள்ளார்கள். அது உண்மையானால், வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதுதொடர்பில் சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம். ஒற்றை ஆட்சியின் கீழ் பொருளாதார நலன்கள் மட்டுமே அவர்களுக்கு வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் நான் அரசியலில் இருந்து உடனே விலகி விடுவேன். இல்லையென்றால், எமது தலைவர்கள் புதிதாகச் சிந்தித்து அரசியல் மேதகைப் பண்புகளுக்குரிய முடிவுகளை எடுத்து எமது இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ஆகவே, எமக்கான அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் தாருங்கள். நாம் ஏனையோருடன் இணைந்து இந்த நாட்டை அமைதியும் செழிப்பும் மிக்கதாக ஆக்குவோம் என்றார். 

பகிர்ந்துகொள்ள