கொழும்பில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின்மீது கடந்த 22 ஆம் திகதி படையினரால் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான வன்முறைத்தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக சர்வதேச நாடுகள் பலவற்றிலும் இயங்கிவரும் முன்னணி பல்கலைக்கழகங்களில் பணியாற்றிவரும் புத்திஜீவிகள் 158 பேர் இணைந்து கூட்டறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி முன்னைய முறையற்ற ஆட்சியாளருக்கு எதிராக பரந்தளவில் மேற்கொள்ளப்பட்ட அமைதிவழிப்போராட்டங்களின் விளைவாக வெற்றிடமான ஜனாதிபதிப்பதவிக்காகவே ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்டார் எனக் குறிப்பிட்டுள்ள அவர்கள், அவ்வாறிருக்கையில் முன்னைய ஆட்சியாளர்களின் அதே முறையைப் பின்பற்றுவது நாட்டை முன்னோக்கி நகர்த்திச்செல்வதற்கு ஒருபோதும் உதவப்போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ மீதும், அமைதிப்போராட்டக்காரர்கள் மீதும் கடந்த 22 ஆம் திகதி நடத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களைக் கண்டித்து பிரிட்டன், அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, சுவீடன், அவுஸ்திரேலியா, சுவிஸ்லாந்து, ஜேர்மனி, இந்தியா, பிரான்ஸ், நோர்வே, சிங்கப்பூர், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இயங்கிவரும் முன்னணி பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் கடமையாற்றும் புத்திஜீவிகள் 158 பேரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி மிகப்பரந்தளவில் பணியாற்றிவரும் புத்திஜீவிகளான நாம் கடந்த 22 ஆம் திகதி கொழும்பில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின்மீது படையினரால் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான வன்முறைத்தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அமைதிவழிப்போராட்டக்காரர்கள் அறுவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டு, முழங்கால்களால் புகையிரதப்பாதையில் நடக்கவிடப்பட்டு, அவர்கள் மயங்கிவிழும் வரையில் படையினரால் தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டதாகக் கிடைத்திருக்கும் தகவல் எம்மை பேரதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அமைதிவழிப்போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய 9 முன்னணி செயற்பாட்டாளர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டமையை (பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்) நாம் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம்.
வன்முறைகளற்ற முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்மீது புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணிநேரத்திற்குள்ளாகவே காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உத்தரவிட்ட ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடானது, அவரது ஆட்சிமுறை தொடர்பில் கவலைக்குரிய சமிக்ஞையைக் காண்பித்திருப்பதுடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
அமைதி வழியிலான செயற்பாட்டாளர்கள் கடந்த பல மாதங்களாக நாட்டின் நெருக்கடி நிலைக்குக் காரணமானவர்களுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராட்டங்களை முன்னெடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தனர்.
அதுமாத்திரமன்றி நாட்டுமக்களின் அறிவை மேம்படுத்தும் நோக்கிலான செயற்பாடுகளை பல்கலைக்கழகம், நூலகம் போன்ற பல்வேறுபட்ட வழிகளில் முன்னெடுத்திருந்தனர்.
அமைதிவழிப்போராட்டக்காரர்களை ‘பாசிஸவாதிகள்’ என சித்தரிப்பது முற்றிலும் தவறானதும், கண்டிக்கத்தக்கதுமான செயற்பாடு என்பதுடன், அவர்கள்மீது அரச படைப்பலத்துடன்கூடிய வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை நியாயப்படுத்துவதற்கான முயற்சியாகவே அதனை நோக்கவேண்டியிருக்கின்றது.
முன்னைய முறையற்ற ஆட்சியாளருக்கு எதிராக பரந்தளவில் மேற்கொள்ளப்பட்ட அமைதிவழிப்போராட்டங்களின் விளைவாக வெற்றிடமான ஜனாதிபதிப்பதவிக்காகவே ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்டார்.
அவ்வாறிருக்கையில் முன்னைய ஆட்சியாளர்களின் அதே முறையைப் பின்பற்றுவது நாட்டை முன்னோக்கி நகர்த்திச்செல்வதற்கு ஒருபோதும் உதவப்போவதில்லை என்பதுடன் மக்களைத் தண்டிப்பதை முதலாவது கடமையாகக் கருதாமல், அவர்கள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளுக்கு உரியவாறான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதையே முன்னிலைப்படுத்தவேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சாசனங்களுக்கு அமைவாக நாட்டுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.
அதுமாத்திரமன்றி கொழும்பு, காலிமுகத்திடல் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள அதிகரித்த இராணுவப்பிரசன்னத்தை உடனடியாக நீக்குமாறும் போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகித்தவர்களைப் பொறுப்புக்கூறச்செய்யுமாறும் வலியுறுத்துகின்றோம் என்று அக்கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.