சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களின் கரி நாள்!!

You are currently viewing சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களின் கரி நாள்!!

சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களின் கரிநாள்பிரித்தானியரிடமிருந்து  கைமாறி,  கடந்த 73ஆண்டு  காலமாக  அடிமைகள்  போன்று,  சிங்கள  பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழினம், இதுவரை சுதந்திரம் அடையவில்லை. வரலாறு அதைத்தான் தமிழ்மக்களுக்கு வெளிப்படுத்தி நிற்கின்றது. சிறிலங்கா அரசினால் தமிழினம் மிகப்பெரிய மனித போரவலம் நிறைந்த இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டும் எமது உறவுகள் வலிந்து  காணாமல்  ஆக்கப்பட்டு,  தமிழர்களின்  பூர்வீக  நிலங்கள்,  மதத்தலங்கள்  என்பன  திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டும், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு இன்றும்

 தொடர்ந்துகொண்டிருக்கின்றது. 73வருடங்கள்கடந்தும்  அடக்குமுறைகளுக்கு  உள்ளாக்கப்பட்டு,  அடையாளங்கள்  சிதைக்கப்பட்டு  வஞ்சிக்கப்படும் இனமாகவே சிறிலாங்கா அரசின் ஏதேச்சதிகாரத்துள் சிக்குண்டு கிடக்கின்றோம்.  வடக்கு  கிழக்கு  தமிழ்  மக்களின்  நிலை  குறித்து  ஆக்கபூர்வமான  கவனங்களையும்  சர்வதேச  சமூகமும் எடுத்திருக்கவில்லை. 30வருடங்கள் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசத்தை மிக மோசமான வறுமை நிலையின் மூலம் நிகழக்கூடிய பாதிப்புக்களிலிருந்து மீட்டெடுக்கக்கூடிய வழிவகைகளை சிறிலங்கா அரசோ,  சர்வதேச  சமூகமோ  எடுத்திருக்கவில்லை.  போரால்  பாதிக்கப்பட்ட  பெண்  தலைமைத்துவக் குடும்பங்களினதும்  சிறுவர்களினதும்  எதிர்காலமே  கேள்விக்  குறியாகியிருக்கும்  நிலையில்  அவர்களைப் பாதுகாத்து,  அவர்களது  வாழ்வை  சிறப்பாக்கி,  சமூகத்துக்கு  பங்காற்றக்  கூடிய  வகையில்  எந்த உதவிகளையும் சர்வதேச சமூகம் செய்திருக்கவில்லை. 2009இறுதி  யுத்தத்தின்  போது  குடும்ப  உறுப்பினர்கள்  சாட்சியாக,  சிறிலங்கா  இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு  என்ன  நடந்தது?  என்பது  இன்று  வரை  கண்டறியப்படவில்லை.போரின்  இறுதி நாட்களில் சரணடைந்த பல பெண்களும் சிறுவர்களும், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு சிங்கள அரசால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.தடைசெய்யப்பட்ட  போராயுதங்களைப்  பயன்படுத்தி,  பாதுகாப்பு  வலயங்கள்  என  சிறிலங்கா  அரசால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த  பிரதேசத்தில்  தஞ்சம்புகுந்த  தமிழ்  மக்களை,  தமிழர்  என்கின்ற  ஒரே காரணத்துக்காக   ஈவிரக்கமின்றி,   கொத்துக்கொத்தாக   இனப்படுகொலை   செய்திருந்தனர்.   கிருசாந்தி குமாராசாமி,  சிவலோகநாதன்  வித்தியா,  சேயா,  பாலசந்திரன்  போன்ற  சிறுவர்களின்  படுகொலைகளின் பின்னரும்   கூட –சர்வதேசத்தின்   கவனம்   தமிழர்கள்   மீது   திரும்பாமல்   இருப்பது   மிகுந்த ஏமாற்றமளிக்கின்றது. வடக்கு  கிழக்கு  பிரதேசத்தின்  கந்தசாமிமலை  தென்னமரவாடி,  குருந்தூர்மலை,  நீராவியடி,கொக்கிளாய், வெடுக்குநாறி,  கன்னியா  வெந்நீரூற்று,  மயிலத்தமடு  போன்ற  தமிழர்  பிரதேசங்கள் -சிங்கள ஆக்கிரமிப்புக்குட்பட்டு,  தமிழ்  மக்களுக்கு  சொந்தமான  நிலங்களும்,  பாரம்பரிய  அடையாளங்களும் சின்னங்களும்  திட்டமிட்டு  அடாத்தாக  அபகரிக்கப்படுகின்ற  விடயங்களையும்தமிழ்  மக்களின்  பாரம்பரிய நிலங்களைச்சிங்கள  இராணுவம்  ஆக்கிரமித்து  மகாவலித்திட்டம்,  தொல்பொருள்  ஆய்வுத்  திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்ற போர்வையில்சிங்களக்குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி சிங்கள  ஆக்கிரமிப்பை  விரிவுபடுத்துவதையும்பார்த்தும்சர்வதேசம்  பாராமுகமாகவே  இருப்பது  எமக்கு கவலையளிக்கின்றது.  தையிட்டி  விகாரையமைப்பு  போன்ற  செயற்பாடுகளினூடாக  தமிழர்  பிரதேசங்களில்; சிங்கள பௌத்த மயமாக்கல் திணிக்கப்படுகின்றது. சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசானது, சிறிலங்காவை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடாக  பிரகடனப்படுத்தும்  நோக்கில்,    சிங்கள  பௌத்தம்  அல்லாத  மற்ற  அனைத்து  இனங்களையும் மதங்களையும் அழிக்கும் நோக்கில் வெளிப்படையாகவே செயற்பட்டு வருகின்றது. தமிழ்  மக்களுக்கு  நடந்த  இனப்படுகொலைக்கு  நியாயம்  கிடைக்க  வேண்டும்.  இன்றைய  கால  சூழலில், தமிழர்களின்  சுதந்திரத்தை  நசுக்கி  எம்மை  அடிமைகளாக  வைத்திருக்கக்கூடிய  சிறிலங்காவின்  சுதந்திர தினத்தை தமிழ் மக்களாகிய நாம் புறகணிக்கின்றோம். எனவே சிறிலங்காவின் சுதந்திரதினம் என்பது தமிழர் வரலாற்றில்  கரிநாளாகவே  உள்ளது.    இந்த  உண்மைகளை  சர்வதேசம்  புரிந்துகொண்டு,  சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த சர்வதேசம் துணைநிற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பு,வடக்கு கிழக்கு.

பகிர்ந்துகொள்ள