சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழருக்கு கரிநாள்!!மட்டக்களப்பில் நடைபெற்ற போராட்டம்!

You are currently viewing சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழருக்கு கரிநாள்!!மட்டக்களப்பில் நடைபெற்ற போராட்டம்!

பல்வேறு அழுத்தங்களுக்குஅச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செங்கலடி சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கு கரிநாள்,நீங்கள் சுதந்திரம் அனுபவிக்கும்போது நாங்கள் ஒடுக்கப்படுவதா,உங்களுக்கு சுதந்திரநாள் எங்களுக்கு திண்டாட்ட நாள்,காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே,எமது மேய்ச்சல் தரை எமக்கு வேண்டும்,நிம்மதியில்லாத நாட்டில் சுதந்திரம் எதற்கு,சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் எதற்கு,எங்கே எங்கே உறவுகள் எங்கே உட்பட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செங்கலடி சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணியானது பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் கொம்மாதுறை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக சென்றடைந்ததும் அங்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மூன்று மாவட்ட தலைவிகள் மற்றும் உறவினர்கள்,இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்றகுழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினை வடகிழக்கு தமிழர்கள் கரிநாளாக அனுஸ்டிக்கும் வகையில் விடுக்கப்பட்டவேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு நகரில் இந்தபோராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தினால் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தர பெறப்பட்ட நிலையில் இந்த போராட்டம் செங்கலடியில் நடாத்தப்பட்டது

பகிர்ந்துகொள்ள

Leave a Reply