சிறீலங்கா அரசைப் பொறுப்புக்கூற வைக்கும் அனைத்துலக நடவடிக்கைகளை பிரித்தானியா முன்னின்று வழிநடத்த வேண்டும் என்று தொழிற்கட்சியின் தலைவர் கீர் ஸ்ராமர் (Keir Starmer) வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானியத் தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் தைப்பொங்கல் செய்தியை வெளியிட்டிருக்கும் பிரித்தானிய மகாராணியாரின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர், தமிழ் மக்களுக்கு நீதி கிட்டுவதற்காகவும், அவர்களின் மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்தும் தொழிற்கட்சி குரல் கொடுக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
அத்தோடு கொரோனா கொல்லுயிரியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டிற்குத் தமிழ் மக்கள் நல்கி உதவிகளுக்குத் தான் நன்றி தெரிவிப்பதாகவும் தனது உரையில் தொழிற்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்கட்சித் தலைவரின் தைப்பொங்கல் செய்தி குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் தலைவர் சென் கந்தையா, சிறீலங்கா தொடர்பிலான பன்னாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஐ.நா. உருவாக்குவதற்கு வழிவகை செய்யும் அழுத்தங்களைப் பிரித்தானிய அரசாங்கத்திற்கு தொழிற்கட்சித் தலைவர் பிரயோகிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.