கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக விடுத்த அறிவிப்பை அடுத்து ஜனாதிபதி கோட்டா மற்றும் பிரதமரை அவசரமாக சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே.
நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை அவசர அவசரமாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு முனையத்தை அபிவிருத்திசெய்வது தொடர்பாக 2019ம் ஆண்டு மே மாதம் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை இலங்கை கட்டாயமாக மதித்துச்செயற்படவேண்டும் என்பதே இந்தச்சந்திப்புக்களின் போது இந்தியத்தூதுவர் வலியுறுத்திய செய்தியின் சாராம்சமாகும் என தி ஹிந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை 51% சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் அதேவேளை இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக 49 % சதவீதமான பங்குகளைக் கொண்டிருக்கும்.
இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனமும் ஜப்பானிய நிறுவனங்களும் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான முதலீட்டை மேற்கொள்வார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.