இராணுவத்தை பழிதீர்க்க புலம்பெயர் அமைப்புகளும் இங்குள்ள சிலரும் முயற்சிப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் நகர்வுகளை கையாள்வதில் அரசாங்கம் செய்ய வேண்டிய மிகச்சரியான நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.
இராணுவத்தை பாதுகாக்கும் விதமாக அல்லது, இராணுவத்தின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும் விதமாக அரசாங்கம் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இது எமக்கும் மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு காரணியாக நாம் கருதுகின்றோம். பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, பொய்யான சாட்சியங்களை உருவாக்கு இலங்கை இராணுவத்தை அவமதிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. புலம்பெயர் அமைப்புகளின் பணம் காரணமாக இங்குள்ள ஒரு சிலரும் இராணுவத்தை குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.
எவ்வாறு இருப்பினும் ஒரு சில நாடுகளுக்கு இந்த நாட்டின் அமைதியை சீர்குலைந்து நாட்டில் இன முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற தேவை உள்ளன.
அதற்கான வெளிப்பாடுகள் இன்று மனித உரிமைகள் பேரவையிலும் வெளிப்பட்டு வருகின்றது. இராணுவம் மீது போர் குற்றங்களை சுமத்தி அதன் மூலமாக இராணுவத்தை பலி தீர்க்க முடியும் என்ற நோக்கம் அவர்களிடம் உள்ளது. ஆனால் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பது எமக்கு மட்டுமே தெரியும். மனிதாபிமானமாக நாம் முன்னெடுத்த இந்த போராட்டம் குறித்து எவரும் எமக்கு கற்பிக்க வர வேண்டிய அவசியம் இல்லை.
யுத்தத்தை 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே எம்மால் முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியும், ஆனால் அதனால் ஏற்படும் அழிவுகள் குறித்து எமக்கு நன்றாக தெரியும்.
அப்பாவி தமிழ் மக்களை பணயம் வைத்தே விடுதலைப்புலிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் அழிவுகளை சந்திக்கக்கூடாது அல்லது அழிவுகள் மிக குறைவாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நாம் மிகக் கவனமாக பயங்கரவாதத்தை மாத்திரம் இலக்கு வைத்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம்.
எனவே இன்று யுத்த குற்றங்களை சுமத்தி இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் நடவடிக்கைகளில் புலம்பெயர் அமைப்புகளும், இலங்கையில் ஒரு சிலரும் முன்னெடுத்து வருகின்றனர்.
இப்போது இல்லாவிட்டலும் எப்போதாவது அவர்களுக்கும் உண்மை விளங்கும். இலங்கையில் மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை அவர்களும் உருவாக்கித்தர வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். மாறாக யார் மீதும் நாம் வைராக்கியத்தை கொட்டி அவர்களை எமது எதிரிகளாக கருதும் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை எனவும் அவர் கூறினார்