சிறீலங்கா காவற்துறையினரின் மூர்க்கத்தனமான செயற்பாடானது தமிழ் மக்களைக் கொந்தளிப்பான நிலைக்கு இட்டுச்செல்லும்!

You are currently viewing சிறீலங்கா காவற்துறையினரின் மூர்க்கத்தனமான செயற்பாடானது தமிழ் மக்களைக் கொந்தளிப்பான நிலைக்கு இட்டுச்செல்லும்!

சம்பூர் சிறீலங்கா காவற்துறையினரின் அடுத்தடுத்த கண் மூடித்தனமான ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையிலான மூர்க்கத்தனமான செயற்பாடானது தமிழ் மக்களைக் கொந்தளிப்பான நிலைக்கு இட்டுச் செல்வதற்கான ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் செயற்பாடாகும் என சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

திருகோணமலை சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் மூவரை சிறீலங்கா காவற்துறையினரின் கைது செய்த சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவித்து சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டு குழு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் 2009 இன் பின்னர் தமது ஜனநாயக உரிமைகளை மட்டுமல்ல தமது அடிப்படை மனிதவுரிமைகளைக் கூட போராடிப் பெற வேண்டியவர்களாகவே இருக்கின்றனர்.

அதிலும் கிழக்கு மாகாணத்தின் சம்பூர் சிறீலங்கா காவற்துறை பிரிவானது மிக மோசமான ஜனநாயக மற்றும் மனிதவுரிமைப் பிறழ்வுகளுக்குள் மக்களை இட்டுச் செல்கிறது என்பதை தற்போதைய நிலைமைகள் தெளிவுபடுத்துகின்றன.உலகின் அனைத்து இனங்களும் தமக்கெனக் கொண்டுள்ள சிறப்புரிமையான நினைவேந்தல் உரிமையினை எமது மக்களிடமிருந்து பறித்து அவர்களது மனவேதனைகளைப் புதைத்து உறவுகளை இழந்தோரை மனநோயாளிகளாக்கும் இழி செயலில் ஈடுபடுகிறது அரச இயந்திரம்.

கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் எந்த மாவட்டத்திலும் தடை செய்யப்படாத மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு சம்பூரில் மட்டும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை எமது நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தடை விதிப்பதாக மூதூர் நீதவான் நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டது.

எனினும் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் செயற்பாட்டுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பதனை தடையுத்தரவை கொண்டு வந்த காவல்துறையினருக்கு தெளிவு படுத்தப்பட்டதுடன் அன்று சேனையூர் பிள்ளையார் கோவில் பொது மக்களால் முன்னெடுக்கப்பட்ட கஞ்சி வழங்கும் செயற்பாடும் நீதிமன்றக் கட்டளைக்கேற்ப முடிவுறுத்தப்பட்டது.

அன்றைய தினம் இரவு வேளையில் கஞ்சி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களின் வீடுகளுக்குள் நுழைந்த சம்பூர் சிறீலங்கா காவற்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.

இச்செயற்பாட்டின் போது கணவரை யுத்தத்தில் இழந்த நிலையில் தாயும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்த வீட்டுக்குள் நுழைந்த சிறீலங்கா காவற்துறையினர் தாயை கைது செய்ய முயன்ற போது மகள் தடுக்க முற்பட்டதால் போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பல்கலைக் கழகத்துக்கு தெரிவான மாணவியான மகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறார்.

இந்நிலையில் ஆண் சிறீலங்கா காவற்துறையினர் தாயையும் மகளையும் மிகக் கேவலமாக மிருகங்களைப் போல நடந்து கொண்டு பெண் என்பதைக் கூட சிந்திக்காமல் வீதிவரை இழுத்துச் சென்று கைது செய்தமையானது பெண்ணிய அமைப்புக்கள் மற்றும் மனிதவுரிமை ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரச இயந்திரமானது இன்னமும் தமது அடக்குமுறைக்கு மிருகத் தனத்தைக் கட்டவிழ்த்து விடும் பழமை வாதத்திலிருந்து விடபடவில்லை என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக இச்சம்பவம் காணப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட கமலேஸ்வரன் விஜித்தா கமலேஸ்வரன் தேனிலா செல்வவினோத் சுஜானி மற்றும் நவரட்ணராஜா ஹரிகரகுமார் ஆகியோர் சம்பூர் சிறீலங்கா காவற்துறையினால் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறீலங்கா காவற்துறையினரின் அடுத்தடுத்த கண் மூடித்தனமான ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையிலான மூர்க்கத் தனமான செயற்பாடானது தமிழ் மக்களைக் கொந்தளிப்பான நிலைக்கு இட்டுச் செல்வதற்கான ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் செயற்பாடாகும். எனவே கிழக்கு மாகாணத்தில் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் சம்பூர் போலீசாரின் செயற்பாடுகளை மிக வன்மையாக நாம் கண்டிக்கின்றோம்.

குறித்த பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் மனிதவுரிமை மீறலுக்கும் எதிராக அரசியல் கட்சிகள் பொதுவமைப்புக்கள் மனிதவுரிமை மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பாக செயற்படும் அமைப்புக்கள் என அனைவரும் இணைந்து காத்திரமான செயற்பாடுகளை மேற்கொள்ள முன்வருமாறும் அறைகூவல் விடுக்கின்றோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply