1. தமிழர்களின் பிரதிநிதிகளாக யார் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவு இருக்க வேண்டும்…
ஏனெனில், 2009 இற்கு பின், இந்தியாவின் பிராந்திய நலன்களுக்காக தமிழரின் அரசியலை இந்தியா கையாள்வதற்கு வசதியாக, இந்திய திணிப்பான 13 ஐ காவித்திரிந்த கூட்டமைப்பு / அதன் அங்கத்துவகட்சிகள், ஜனநாயக தமிழ்த்தேசியகூட்டமைப்பு, தமிழ்மக்கள் கூட்டணி, புளோட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற அத்தனை தரப்புக்களுமே தமிழர் அரசியலை இந்தளவு இழிந்து போக வைத்தவர்கள். எனவே அவர்கள் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும்…
2. திசைகாட்டி / மாற்றம் என்ற மாயைகளின் பின்னால் மறைந்திருக்கும் ஆபத்தை உணர்ந்து கொள்ளவேண்டும்…
NPP / திசைகாட்டியின் எழுச்சியும், அரசியலும் தென்னிலங்கைக்கானதே ஒழிய தமிழர் தேசத்திற்கானதல்ல. அவர்களது அரசியலும் இனவாதம் / மதவாதத்தை அடிப்படையாக கொண்டதே.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன், அனுர தமிழர்களுக்கு உறுதியளித்த எதுவும் நடக்கவில்லை. காணி அபகரிப்பு / அம்துமீறிய புத்தர்சிலை வைப்புக்கள் / தொல்லியல் திணைக்களம் மூலமான தமிழர் பிரதேச அபகரிப்பு என்று எல்லாமே தொடர்கின்றன…
தமிழர் விடயத்தில் தீர்வொன்றுக்கான எந்தவிதமான நல்லெண்ண சமிக்ஞையாக, தமிழர் தாயகத்தில் அனுர எதையுமே செய்யவில்லை. எனவே, முன்னைய அரசுகளுக்கு அனுரவும் சளைத்தவரல்ல…
3. சுயேச்சைகள் என்ற பெயரில் களமிறக்கப்பட்டுள்ளவர்கள் பின்னால் உள்ள, தமிழர்களின் வாக்குபல சிதைப்பு என்பதை புரிந்து கொள்ளவேண்டும்…
சுயேச்சைகளாக இம்முறை ஏராளமானவர்கள் ஏன் களமிறக்கப்பட்டுள்ளார்கள் என்று மக்கள் சிந்திக்கவேண்டும். சுயேச்சைகளுக்கு பணம் பெருமளவில் கொடுத்து அவர்களை இறக்கி விடுவதால், தமிழரின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு, எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் செய்வதே அதன் நோக்கம்…
அதாவது, குறிப்பாக, முன்னணி பலம் பெற்றுவிட்டால், சர்வதேச விசாரணையை பலமாக வலியுறுத்தி, தேசத்திற்கான அரசியலை செய்வார்கள் என்பதால் அதை தடுப்பதற்காக, முன்னணிக்கு விழும் வாக்குகளை சிதறடிக்கவே சுயேச்சைகள் இறக்கப்பட்டுள்ளன என்ற உண்மையை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்…
பெரும்பான்மை பலம் எந்தக்கட்சிக்கும் கிடைக்காத பட்சத்தில், தமிழர் பிரச்சனை சார்ந்து நாடாளுமன்றத்தில் எதையும் ஒற்றுமையாக முன்னகர்த்த முடியாதபடி கட்சிகள் சிறுபான்மையாகவே இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது…
இவை மூன்றையும் பகுத்தாய்து பார்க்கும் மக்களின் தீர்க்கமான முடிவு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற சக்தியை பலப்படுத்தி, பெரும்பான்மையாக வாக்களித்து, அவர்ளுக்கு பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தை வழங்கி, தமிழர் அரசியலை உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் உறுதிபெற வைப்பதேயாகும்…
குகன் யோகராஜா