சிறீலங்கா மீது நடவடிக்கை எடுக்க பிரித்தானிய எதிர்க்கட்சிகள் முயற்சி

You are currently viewing சிறீலங்கா மீது நடவடிக்கை எடுக்க பிரித்தானிய எதிர்க்கட்சிகள் முயற்சி

சிறீலங்கா அரசாங்கம் மீது பிரித்தானிய நீதிமன்றங்கள் மூலம் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பு, ஆளும் கட்சியின் முட்டுக் கட்டைகளால் கைநழுவிச் செல்லும் அபாயம் எழுந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியுள்ள நிலையில் ஏனைய உலக நாடுகளுடன் வணிக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான வணிகச் சட்டமூலம் ஒன்றை பிரித்தானிய நாடாளுமன்றில் ஆளும் மரபுவாதக் கட்சி (கொன்சேவற்றிவ்) கொண்டு வந்துள்ளது.

எனினும் மானிட குலத்திற்கு எதிரான குற்றச் செயல்கள், போர்க்குற்றங்கள் போன்ற பன்னாட்டுக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட நாடுகளுடன் இவ்வாறான வணிக ஒப்பந்தங்களைப் பிரித்தானிய அரசாங்கம் செய்யக் கூடாது என்றும், அவ்வாறு அது செய்ய முற்பட்டால் அவ் ஒப்பந்தங்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் தடையுத்தரவு பிறப்பிப்பதற்கு வழிவகை செய்யும் சரத்துக்கள் குறித்த சட்டமூலத்தில் இணைக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவைக் கொண்ட திருத்தம் ஒன்றை தாராண்மை சனநாயக கட்சியின் பிரபுக்கள் சபை உறுப்பினர் ஒல்ரன் பிரபு முன்மொழிந்துள்ளார்.

அதே போன்று இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இனப்படுகொலைகளில் ஏதாவது ஒரு நாடு ஈடுபடுமாயின், அந் நாட்டுடன் வணிக ஒப்பந்தங்களைப் பிரித்தானியா ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும், அவ்வாறான ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டால் அவற்றைத் தடை செய்யும் அதிகாரம் பிரித்தானிய நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று விதிக்கும் இன்னொரு திருத்தத்தைப் பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் பிரபுக்கள் சபை உறுப்பினர் கொலின்ஸ் பிரபு முன்மொழிந்துள்ளார்.  

இதன் விளைவாக இனி வரும் காலங்களில் சிறீலங்கா அரசாங்கத்துடன் வணிக உடன்படிக்கைகள் எவற்றையாவது பிரித்தானிய அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டால் பிரித்தானிய நீதிமன்றங்கள் ஊடாக அவற்றுக்குத் தடை விதிப்பதற்கான அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ் இரு சட்டமூலத் திருத்தங்களுக்கும் சகல எதிர்க்கட்சிகளும் முழுமையான ஆதரவு வழங்கியுள்ள பொழுதும், இவற்றை ஆளும் கட்சியான மரபுவாதக் கட்சியின் (கொன்சேவற்றிவ்) நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள