காரைநகரில் வாள் காட்டி மிரட்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் சிறீலங்கா காவற்துறையால் கைது செய்யப்பட்ட நபர்கள் சிறீலங்கா காவற்துறையினர் நிலையத்திற்குள் இருந்து Selfy எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமை தொடர்பில் காரைநகர் மக்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
காரைநகர் கிழக்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் உட்பட்டவர்களுக்கு வாள் காட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் ஊர்காவற்றுறை சிறீலங்கா காவற்துறையினரிடம் முறையிடப்பட்டிருந்தது.
ஊர்காவற்றுறை சிறீலங்கா காவற்துறை சம்பவம் தொடர்பில் இருவரை பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்திருந்தபோதிலும்,
அவர்கள் காவற்துறையினரையும் உள்ளடக்கி Selfy எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கின்றனர்.
இதனிடையே, அவர்களில் ஒருவர் காவற்துறையால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருக்கு நெருக்கமான உறவினர்கள் வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல், அங்கிருந்த வயோதிபப் பெண் ஒருவரைத் தாக்கியுள்ளது. அதன் தொடராக அங்கிருந்து கதிரைகளுக்கு தீ வைத்து எரித்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து அந்த வீடு முற்றாக எரிந்து அழிந்துள்ளது.
அதன் பின்னர் மற்றொரு வீட்டின் வேலிக்கு தீ வைத்த போதிலும் அந்த வீட்டின் சில பகுதிகள் மட்டும் எரிந்த நிலையில் அயலவர்களால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
வன்முறையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி அவர்கள் மீண்டும் வன்முறைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு சிறீலங்கா காவற்துறை தவறியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.