தென் அமெரிக்க நாடான சிலியில் மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் மக்களை கொந்தளிக்க செய்துள்ளன. இதன் காரணமாக அதிபர் செபாஸ்டியன் பினேராவின் வலதுசாரி அரசுக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக தலைநகர் சாண்டியாகோவில் பிளேசா இட்டாலியா பகுதியில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களில் வன்முறையும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நண்பகல் நேரத்தில் அங்கு போலீசார் சென்றனர். அவர்கள் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அந்தப்பகுதி போர்க்களம் போல காட்சி அளித்தது.
போராட்டத்தில் கலந்துகொண்ட லூயிஸ் ரோஜாஸ் என்பவர் கூறும்போது, “மக்களின் கோரிக்கைகளை அதிபர் செபாஸ்டியன் பினேரா ஏற்றுக்கொள்ளும்வரையில் எங்களின் போராட்டம் தொடரும்” என்று குறிப்பிட்டார்.