உலகிலேயே முதன்முறையாக, கடலில் சால்மன் மீன்களை வளர்க்கக்கூடிய மாபெரும் வளர்ப்பு கப்பலை உருவாக்கி, சீனா புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது.
பாரம்பரிய நில அடிப்படையிலான மீன்பண்ணை முறைகளை விட்டு விலகி, கடலின் நடுப்பகுதியில் மீன் வளர்ப்பை முன்னெடுக்கும் சீனாவின் இந்த புதிய முயற்சி, உலக நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
இக் கப்பல் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டு, சுத்தமான மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய சூழலில் சால்மன் மீன்களை வளர்க்கும் திறன் பெற்றதாகும்.
அத்துடன் இயற்கை மாசுபாடுகள் மற்றும் நோய்கள் போன்றவையை கட்டுப்படுத்தி, உயர்தர மீன் உற்பத்தியை உறுதி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது
குறிப்பாக சுற்றுச்சூழல் நலம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் முன்னிலைப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமையப்பட்டுள்ளது. நிலப்பரப்பை உபயோகப்படுத்தாமலேயே கடல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தும் இந்த முயற்சி, மீன்பிடித் துறையில் ஒரு புதிய தொழில்நுட்ப யுக்தி என்றே பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சியின் கடலின் நடுப்பகுதியில் அதிக அளவில் சால்மன் வளர்ப்பு மேற்கொள்ளப்பட முடியும் எனவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் குறையும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உணவுப் பாதுகாப்பையும் இது மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இக் கப்பல் சோதனை (sea trial) கட்டத்தில் உள்ளது எனவும், விரைவில் இது முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீன்வளத் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை முன்வைக்கும் சீனாவின் இப் புதிய முயற்சி உலகளாவிய மீன்பிடி மற்றும் அக்வாடெக் (Aqua-tech) துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.