சீனாவில் உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட கனேடியருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

You are currently viewing சீனாவில் உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட கனேடியருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

சீனாவில் உளவாளியாகச் செயற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள கனேடியரான மைக்கேல் ஸ்பேவர் குற்றவாளி என சீன நீதிமன்றத்தால் தீா்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குவாவி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோ கனடாவில் கைது செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து இரு கனேடியர்கள் சீன அரசால் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டமை ஆகியவற்றால் சீனா -கனடா இடையிலான உறவுகள் சீர்குலைந்துள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு இரு நாட்டு உறவுகளில் மேலும் விரிசல்களை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.

கனேடியரான மைக்கேல் ஸ்பேவர் மீது சீனாவில் உளவு பார்த்தமை, மற்றும் அரச இரகசியங்களைத் திருடி ஏனைய நாடுகளுக்கு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

இதேவேளை, இந்தத் தீா்ப்பு தன்னிச்சையானது. வெளிப்படைத் தன்மை இல்லாதது என கனேடிய அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

குவாவி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோ கனடா – வான்கூவரில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ஸ்பேவர் மற்றும் மைக்கேல் கோவ்ரிக் ஆகியோரை சீன அரசு கைது செய்து தடுத்து வைத்தது.

இந்நிலையிலேயே மைக்கேல் ஸ்பேவர் குற்றவாளி என சீன நீதிமன்றத்தால் தீா்ப்பளிக்கப்பட்டு அவருக்கு நேற்று 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தியசீ குற்றச்சாட்டில் சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு கனேடியரான ரொபேர்ட் ஷெல்லன்பெர்க் என்பவருக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டு 24 மணிநேரங்களில் இந்தத் தீா்ப்பு வெளியானது.

ரொபேர்ட் ஷெல்லன்பெர்க்குக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கனடா மற்றும் அதன் பல சர்வதேச நட்பு நாடுகள் கண்டித்துள்ளன. இந்த மரண தண்டனையை இரத்துச் செய்ய வேண்டும் என அந்நாடுகள் சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள கனேடிய முன்னாள் இராஜதந்திரியான கோவ்ரிகின் விசாரணை கடந்த மார்ச் மாதத்தில் முடிவடைந்தது. எனினும் அவரது வழக்கின் தீா்ப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில் கனடாவில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சீனாவின் குவாவி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோ தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளைத் தொடர்ந்து அவா் விரைவில் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படலாம் எனத் தெரியவருகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply