சீனாவில் ஒன்லைன் விளையாட்டில் ஈடுபாடு கொண்ட சிறுமி ஒருவர் நான்கு மாதங்களில் மொத்தமாக 52 லட்சம் பணத்தை செலவு செய்துள்ளார்.
சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 13 வயது சிறுமி தமது தாயாரின் வங்கி அட்டையை பயன்படுத்தி, தமது ஒன்லைன் விளையாட்டு போதைக்கு செலவிட்டுள்ளார்.
பாடசாலையில் அதிக நேரம் மொபைலில் குறித்த சிறுமி செலவிடுவதை கவனித்த ஆசிரியர் ஒருவர், அவர் மீது சந்தேகம் கொண்டுள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமியின் தாயாரை தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து அந்த தாயார் தமது வங்கிக் கணக்கை பரிசோதிக்க, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவரது கணக்கில் 0.5 யுவான் மட்டுமே எஞ்சியிருந்தது. இதனையடுத்து அந்த சிறுமி நடந்தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார்.
அதாவது 120,000 யுவான்(13,93,828 ரூபாய்) தொகைக்கு ஒன்லைன் விளையாட்டுகளை வாங்கியதாகவும், விளையாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் 210,000 யுவான்(24,39,340 ரூபாய்) செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சக மாணவர்கள் 10 பேர்களுக்கு 100,000 யுவான் செலவிட்டு விளையாட்டுகளை வாங்கி பரிசளித்துள்ளார். மொத்தமாக அந்த குடும்பத்தினரின் சேமிப்பு தொகையான 52 லட்சம் குறித்த சிறுமி, நான்கு மாதங்களில் செலவு செய்துள்ளார்.
ஆனால் இந்த விவகாரத்தில் ஆசிரியர்களிடம் இருந்து உதவி பெற பயந்ததாகவும் குறித்த சிறுமி தெரிவித்துள்ளார். தாயாரின் வங்கி அட்டை தமது கையில் சிக்கிய நிலையில், ஏற்கனவே அதன் ரகசிய இலக்கமும் தெரிந்திருந்ததால் விளையாட்டுகளை வாங்கியதாக சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எப்போது வாங்கியது, செலவிட்ட தொகை உள்ளிட்ட தரவுகளை தமது மொபைலில் இருந்து அழிக்கவும் செய்துள்ளார். இந்த சம்பவம் சீன சமூக ஊடக பக்கங்களில் பெரும் கவனத்தை ஈர்த்ததுடன், யார் மீது தவறு என்பது தொடர்பில் விவாதமும் ஏற்பட்டுள்ளது.