சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்த நபர்கள் தங்கிய ஓட்டல் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவின் தென்கிழக்கே புஜியானில், குவாங்சு நகரில், லிசெங் பகுதியில், தங்கு விடுதி ஒன்றில், சில அறைகளில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை தங்க வைத்து கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு இந்த விடுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். 71 பேர் சிக்கி உள்ளனர். அவர்களில் 42 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விடுதி உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
இதன்பின் மீட்பு பணியில் 800க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 தேடுதல் மற்றும் மீட்பு பணியினர் மற்றும் மீட்பு பணிகளுக்காக 7 நாய்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு அங்கிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரசால் அந்நாட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.