சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்: 3 நாட்களுக்கு பிறகு 13 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு!

  • Post author:
You are currently viewing சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் புகுந்த வெள்ளம்: 3 நாட்களுக்கு பிறகு 13 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு!

சீனாவின் தென்மேற்கு பகுதியில் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யிபின் நகரில் சான்முசு என்ற நிலக்கரி சுரங்கம் உள்ளது. கடந்த சனிக்கிழமை மதியம் இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சுரங்கத்துக்குள் வெள்ளநீர் புகுந்தது.

இதில் சுரங்கத்தின் மையப்பகுதியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 18 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர். ஆனால் அதற்குள் 5 தொழிலாளர்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.

இதற்கிடையே சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து 10 கி.மீ. தொலைவில் 13 தொழிலாளர்கள் சிக்கியிருப்பது தெரியவந்தது. ஆனால் சுரங்கத்துக்குள் மின்சாரம், தகவல் தொடர்பு மற்றும் செயற்கை சுவாச அமைப்புகள் அனைத்தும் செயலிழந்ததோடு, கியாஸ் கசிவு ஏற்படும் அபாயமும் எழுந்ததால் மீட்பு குழுவினருக்கு சிக்கல் எழுந்தது.

எனினும் நம்பிக்கையோடு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 13 மீட்பு குழுக்களை சேர்ந்த 251 பேர் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கு இருக்கும் அத்தனை வாய்ப்புகளையும் ஆராய்ந்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தினர்.

எனினும் விபத்து நடந்து 2 நாட்களுக்கு மேல் ஆனதால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பார்களோ என்ற அச்சம் எழுந்தது.

எனவே தொழிலாளர்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்ய சுரங்கத்தின் ஒரு முனையில் இருந்து சுரங்கத்துக்குள் உள்ள இரும்பு கம்பியை மீட்புகுழுவினர் பலமாக தட்டினர். அதனை தொடர்ந்து சுரங்கத்தின் மற்றொரு முனையிலும் இரும்பு கம்பியை தட்டும் சத்தம் கேட்டது.

இதன் மூலம் தொழிலாளர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதும், அவர்களே கம்பியை தட்டி பதில் அளித்தனர் என்பது உறுதி செய்யப்பட்டது. இது மீட்பு குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. உடனடியாக அவர்கள் மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.

இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 3 மணியளவில் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த ஒரு தொழிலாளர் தாமாக வெளியே வந்தார். அவர் தனது சக ஊழியர்கள் 12 பேரும் சுரங்கத்துக்குள் பாதுகாப்பாக இருப்பதாக மீட்பு குழுவினரிடம் கூறினார்.

மேலும் அவர்கள் இருக்கும் இடத்துக்கு எளிதில் செல்வதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர் விளக்கினார். அதன்படி தொழிலாளர்களை மீட்க மீட்பு குழுவினர் சுரங்கத்துக்குள் சென்றனர்.

காலை 7.56 மணிக்குள் தொழிலாளர்கள் 12 பேரையும் பத்திரமாக மீட்டு மீட்பு குழுவினர் வெளியே வந்தனர். அப்போது சுரங்கத்துக்கு வெளியே இருந்த சக மீட்புகுழுவினர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

விபத்து நடந்த சுமார் 3 நாட்களுக்கு பிறகு தொழிலாளர்கள் 13 பேரும் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள