சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருவதால், ஷாங்காய் மாகாணத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
இந்த வைரஸ் தொற்றினால் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர், இதனால் வேறு வழி இல்லாமல் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் மட்டுமே முழு தீர்வாக அமைந்தது. இதனால் கொரோனா முதல் அலை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.
இந்த நிலையில் மீண்டும் பிரிட்டனிலிருந்து கொரோனா வைரஸ் உருமாறி, டெல்டா வகை வைரஸ் ஆக உலகம் முழுவதும் பரவியது. முதல் அலையை விட, இந்த வைரஸ் பெருமளவு மக்களை வேகமாக தாக்க தொடங்கியதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இவ்வைரஸை கட்டுப்படுத்த விஞ்ஞானிகளின் பெரும் முயற்சியின் காரணமாய் கொரோனா தடுப்பூசி அறிமுகமானது. இதனால் விஞ்ஞானிகளே கட்டுப்பாட்டுக்குள் கொரோனா வைரஸ் பணிந்தது. உலக மக்களும் ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
கொரோன வைரஸ் பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த மக்களுக்கு பேரிடியாக தென்னாப்பிரிக்காவிலிருந்து மீண்டும் புதிய வகை வைரஸ் உருமாறி உலகம் முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் மீண்டும் ஊரடங்கு, கடுமையான கட்டுப்பாடுகள் என மக்களின் இயல்பு வாழ்க்கை கொரோனா வைரஸ் உடனே பயணிக்க தொடங்கியது.
பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸை கட்டுப் படுத்தினாலும், சில நாடுகளில் உயர்ந்தும், சில நாடுகளில் குறைந்தும் காணப்படுகிறது. இந்நிலையில், சீனாவில் கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருவதால், அங்கு பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் சீனாவில் உள்ள ஷாங்காய் மாகாணத்தின் புடோங் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால், அந்த மாவட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பரிசோதனை செய்ய மட்டுமே வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், குடியிருப்புவாசிகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நடைபாதை மற்றும் திறந்தவெளி பகுதிகளில் நடக்கவும் தடைவிதித்துள்ளது. பொதுமக்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்வதற்கான இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால், உலக மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராத சூழலில், சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா அதிகரிப்பால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.