கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி, சீனாவின் உற்பத்தி மற்றும் தொழில் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் வூகான் பகுதியில் உற்பத்தியான கொரோனா வைரஸ் பாதிப்பு தொழில் மற்றும் வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கைத்தொலைபேசி , தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு சாதன பொருட்களின் உதிரிபாக தயாரிப்பில் சீன நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. சீன வருட பிறப்பிற்காக விடுமுறை அறிவித்த நிறுவனங்கள், கொரோனா எதிரொலியால், விடுமுறையை நீட்டித்துள்ளன. இதனால், மின்னணு சாதன உதிரிபாக உற்பத்தி நின்றுள்ளது.
உதிரிபாகம் இல்லாமல் உலகளாவிய முறையில், அந்த நிறுவனங்களை நம்பியுள்ள கைத்தொலைபேசி , தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்கள் முடங்கி உள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீன பங்கு சந்தைகள் அனைத்தும் வரலாறு காணாத சரிவை சந்தித்த நிலையில், நுழைவு வாயிலான ஹாங்காங், எல்லை வழி நுழைவை நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஏற்றுமதி, இறக்குமதி முற்றிலுமாக சரிந்துள்ளது.
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைந்துள்ளது, அந்தந்த நாடுகளின் உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, அமெரிக்கா இடையே வர்த்தக போர் நிலவி வரும் நிலையில், சீனாவுக்கு கொரோனா மற்றொரு அடியாகியுள்ளது.
பங்குகளை வாங்க யாரும் முன்வராத நிலையில், விற்கவும் முடியாமல் தவித்துள்ள சீனாவில், உணவகம், நட்சத்திர விடுதிகள், சுற்றுலா தலங்கள், வர்த்தக அங்காடிகள் உள்ளிட்டவை வெறிச்சோடி உள்ளன.
உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சீனா, பல்வேறு வகையிலும் பேரிடியை சந்தித்து பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.