சீனாவில் வரலாறு காணாத அளவு பனிப் பொழிவதால் அங்கு மக்களின் இயல்பு நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சீன அரசு பனிப் பொழிவு மேலும் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிபர் ஜிஜின் பிங் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பீஜிங்கில் நடப்பாண்டில் பனிப்பொழிவு காலம் தொடங்கியவுடனே புதிய உச்சத்தில் குளிர்நிலை பதிவாகியுள்ளதால் பொதுப் போக்குவரத்தில் கடுமையான தாமதங்கள் நிகழ்கின்றன. ஓடுதளங்கள் வழுக்கும் சூழலில் இருப்பதால் விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. டிச.14-ல் சீனாவில் பனியால் மெட்ரோ ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கணக்கான பயணிகள் காயமடைந்தனர்.
இந்நிலையில், பீஜிங் வானிலை ஆய்வு மையம் இன்று (டிச.16) காலை வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 19-ஆம் தேதி வரை நாட்டில் பரவலாக பல பகுதிகளில் குளிர் அலை வீசும் என்று தெரிவித்துள்ளது. வடக்கு சீனா, மஞ்சள் ஆறு, ஹூஹே ஆற்றுப் பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு உறை பனி ஏற்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தனை குளிருக்கு இடையேயும் சுற்றுலா பயணிகள் சீனப் பெருஞ்சுவரை சுற்றிப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினர்.
இனி வரும் நாட்களில் சீனாவில் பரவலாக பல பகுதிகளிலும் பூஜ்ஜிய டிகிரி அல்லது அதற்கும் குறைவாகவே வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறுகின்றது. வியட்நாமை ஒட்டிய குய்சு மாகாணத்திலும் கடும் குளிர், உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலக்கரி, எரிசக்தி, எண்ணெய், எரிவாயு விநியோக நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதோடு, அவற்றில் இருந்து மக்களுக்கு தடையில்லா விநியோகம் நடப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த கோடை காலத்தில் சீனா மிக மோசமான வெப்பத்தை உணர்ந்தது, பின்னர் வடக்கு சீனாவை கடுமையான மழை வெள்ளம் புரட்டிப் போட்டது. தற்போது வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற கடுமையான காலநிலைகள் புவிவெப்பமயமாதலால் ஏற்படுவதாக அந்நாட்டின் சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.