சீனாவுக்கெதிரான நடவடிக்கைகளில் நேட்டோ கூட்டமைப்பு!

You are currently viewing சீனாவுக்கெதிரான நடவடிக்கைகளில் நேட்டோ கூட்டமைப்பு!

நேட்டோ கூட்டமைப்பு நாடுகள், மற்றும் ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தலாக அமையும் விதத்தில் சீனாவின் வளர்ச்சியும், நகர்வுகளும் இருப்பதால், சீனாவுக்கெதிரான நிலைப்பாடுகள் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டுமென, Belgium, Brussels இல் நடைபெற்ற நேட்டோ கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேட்டோவின் வரலாற்றில், சீனாவுக்கெதிரான நிலைப்பாடு பற்றி கடுமையான அறிக்கையிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த கருத்துக்களை நேட்டோ உச்சி மாநாட்டில் பகிரங்கமாக அறிவித்த நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் Jens Stoltenberg, நேட்டோ அங்கத்துவநாடுகளை மட்டுமன்றி, முழு ஐரோப்பாவையும் தாக்கும் திறன் கொண்ட அணுவாயுதங்களை சீனா தயாரித்து வருவதாகவும், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் சீனா இருந்துவருவதும் மாற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளமை கூர்ந்து கவனிக்கத்தக்கது.

நேட்டோ கூட்டமைப்பை மேலும் விரிவாக்குவதன் மூலம் ரஷ்யாவை இறுக்கமான சூழ்நிலைக்குள் கொண்டுவரும் பொருட்டு, ரஷ்யாவின் அயல் நாடுகளான Finland மற்றும் Sweden ஆகிய நாடுகளை நேட்டோ கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள, நேட்டோ தலைமையகமும் அமெரிக்காவும் கடும் முயற்சிகளை முன்னதாக மேற்கொண்டு வந்த நிலையில், குறித்த இவ்விரு நாடுகளும் நேட்டோவில் இணைக்கப்பட வேண்டுமானால் தமது நிபந்தனைகளுக்கு இவ்விரு நாடுகளும் பணிந்து வரவேண்டுமென Turkey நிபந்தனை விதித்ததால் நிலைமை மிகுந்த சிக்கலுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேட்டோவின் விதிகளின்படி, புதிய அங்கத்துவ நாடுகளை சேர்த்துக்கொள்ளும்போது, கூட்டமைப்பிலுள்ள அனைத்து நாடுகளின் சம்மதம் பெறப்பட்டு ஏகமனதாக முடிவு எட்டப்படவேண்டும் என்பது விதியாக இருக்கும் நிலையில் Turkey யின் இந்த நிபந்தனையால் நேட்டோ தலைமையகம் மிகுந்த பின்னடைவை சந்தித்திருந்தது.

Sweden நாட்டிலிருக்கும், குர்திஷ் விடுதலை அமைப்பான PKK அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர்களையும், Turkey யின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியவர்கள் என Turkey கருதும் நபர்களையும் சேர்த்து 33 பேரை Sweden தன்னிடம் ஒப்படைப்பதோடு, குர்திஷ் விடுதலைக்காக போராடும் அமைப்புக்களுக்கு ஆதரவளிக்கும் நிலையை நிறுத்திக்கொள்வதோடு, Turkey இற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை என்ற Sweden மற்றும் Finland ஆகிய நாடுகளின் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும், இவற்றுக்கு இரு நாடுகளும் ஒத்துக்கொண்டால் மட்டுமே நேட்டோ கூட்டமைப்பில் சேர முடியுமென Turkey நிபந்தனை விதித்திருந்தது.

எனினும், Turkey இன் இந்த நிபந்தனைகளை Sweden மற்றும் Finland ஆகிய நாடுகள் நிராகரித்ததையடுத்து, மேற்படி மூன்று நாடுகளுக்குமிடையில் சமாதானமான இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தும் முயற்சியில் நேட்டோ பொதுச்செயலாளர் கடந்த பல வாரங்களாக ஈடுபட்டு, இப்போது ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், இதன் பிரகாரம் மேற்படி இரு நாடுகளும் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்து கொள்வதற்கு தடைகளேதுமில்லை என அறிவிக்கப்பட்டு, நேட்டோ கூட்டமைப்பில் இணைந்துகொள்வதற்கான சம்பிரதாயபூர்வமாக அழைப்பு இரு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக இரு நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து கருத்துரைத்த Sweden நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், Turkey யால் தேடப்படும், Sweden இல் வசித்துவரும் நபர்கள் தொடர்பாக Turkey கொடுக்கும் விபரங்களின் கனதியின் அடிப்படையிலேயே, அவர்களை Turkey இடம் ஒப்படைப்பது பற்றி முடிவு செய்யப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், Turkey யின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என கருதப்படுபவர்களில் 73 பேரை தம்மிடம் ஒப்படைப்பதற்கு Sweden மற்றும் Finland ஆகிய நாடுகள் ஒத்துக்கொண்டுள்ளதாக இன்று, Spain தலைநகர் Madrid இல் செய்தியாளர்களிடம் பேசிய Turkey அதிபர் Edrogan தெரிவித்துள்ளார்.

மேற்படி நாடுகளுக்கும் தமக்குமிடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமக்கு இவ்விரு நாடுகளும் அளித்திருக்கும் உறுதிப்பாட்டை இரு நாடுகளும் முதலில் நிறைவேற்றும் யதார்த்தநிலையிலிருந்தே மேற்படி நேட்டோ அங்கத்துவம் தொடர்பிலான முன்னேற்றங்கள் ஏற்பட முடியும் எனவும் Turkey அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், Sweden, Finland ஆகிய நாடுகள் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்துகொள்வதற்கு தடையேதுமில்லை எனக்கருதும் நேட்டோவின் பொதுச்செயலாளர், ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து நேட்டோவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கு Sweden, Finland நாடுகளின் நேட்டோ அங்கத்துவம் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply