சீனாவின் உளவு பலூன் அமெரிக்க வான்வெளியில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக இருப்பதை ஜோ பைடன் அறிந்திருந்தார் என குடியரசுக் கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். கடந்த ஜனவரி 28ஆம் திகதி அன்று சீனாவின் உளவு பலூன் மற்றும் அதன் ஆபத்தான அச்சுறுத்தல் குறித்து ப்ளூம்பெர்க்கின் அறிக்கை ஜனாதிபதி பைடனுக்கு தெரிவித்துள்ளது.
ஆனால், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கனின் சந்திப்பு திட்டம் பாதிக்கப்படும் என பைடன் பயந்துள்ளார். எனவே, அவர் கிட்டத்தட்ட ஒரு வாரமாக இந்த விடயத்தை ரகசியமாக வைத்திருந்தார்.
தற்போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், பலூன் குறித்து அமெரிக்க மக்களிடம் பைடன் நிர்வாகம் வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்துகொண்டதாக குடியரசுக் கட்சியினர் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கட்சியின் பிரதிநிதி நிக்கோல் மல்லியோடாகிஸ் கூறுகையில், ‘கம்யூனிஸ்ட் சீனாவின் கண்காணிப்பு பலூன் சர்வதேச சட்டத்தை மீறுகிறது மற்றும் எங்கள் தாயகத்தை அச்சுறுத்துகிறது. சில நாட்களுக்கு முன்பு பைடன் நிர்வாகம் இந்த பலூனை அலுடியன் தீவுகளுக்கு மேல் பறந்துகொண்டிருந்ததை கண்டறிந்தது மற்றும் அதைப் பற்றி எதுவும் செய்யவில்லை என்பது கோபத்தை ஏற்படுத்தியது.
நமது எல்லையாக இருந்தாலும் சரி, வான்வெளியாக இருந்தாலும் சரி, அதை பாதுகாக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனெனில் இந்த ஜனாதிபதி அதனை செய்ய மாட்டார் என்பது தெளிவாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடைசி நிமிடங்களில் தனது சீன பயணத்தை ரத்து செய்த பிளிங்கன், சீனாவின் இந்த செயல்பாடு ஒரு பொறுப்பற்ற செயல் என்றும், அமெரிக்க இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் தெளிவான மீறல் என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், சீனாவோ உளவு பார்த்ததாகக் கூறப்படும் கூற்றுகளை மறுத்துள்ளதுடன், வானிலை ஆராச்சிக்காக உருவாக்கப்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பலூன் தான் அது என்று கூறியது.