ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும்இ அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும்.
– தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் –
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும், எமது விடுதலைப்போரின் நியாயத்தன்மையை உணர்த்தவும் பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணமானது இன்று இரு குழுக்களாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் ஆரம்பமானது.
சூரிச் மாநிலத்தில் ஆரம்பித்த பயணமானது சுக் மாநிலத்தில் இன உணர்வாளர்களின் உற்சாக வரவேற்புடனும், விருந்தோம்பலுடன் நிறைவடைந்ததுடன், தொடர்ந்து கடும் மழையினையும் பொருட்படுத்தாது விடுதலை வேட்கையுடன் சுக் மாநிலத்திலிருந்து லுட்சேர்ன் மாநிலத்தை மாலையளவில் சென்றடைந்த போது மனிதநேயச் செயற்பாட்டாளர்களை லுட்சேர்ன் வாழ் மாநில இன உணர்வாளர்கள் வரவேற்பளித்து அவர்களது நோக்கம் வெற்றிபெற வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ச்சியாக 17.05.2021 அன்று லங்கெந்தால், சொலத்தூர்ண் நகரங்களுக்கு ஊடாகப் பயணிப்பதோடு, சூரிச் மாநிலத்தில் மாநகரசபை உத்தியோகத்தர்களிடம் தமிழின அழிப்புப் பற்றியதான மகஜர் கையளிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடும் மழைக்கு மத்தியிலும் ஜெனீவா ஐ.நா சபை ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் இன்று முற்பகல் 11:00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணமானது குளிரையும் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் மாலையளவில் லவுசான் நகரைச் சென்றடைந்தது.
தொடர்ச்சியாக நாளை (17.05.2021) காலை பத்து மணியளவில் லவுசான் மாநகரசபை உத்தியோகத்தர்களிடம் மகஜர் கையளிக்கப்படுவதனைத் தொடர்ந்து மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் நொசத்தல் மாநிலம் நோக்கி பயணிக்கவுள்ளனர். அங்கு அம்மாநில மாநகர முதல்வரிடம் மகஜர் கையளிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் மாநகர முதல்வரினால் மனிதநேயச் செயற்பாட்டாளர்களுக்கு விருந்துபசாரம் அளிக்கப்பட்டு கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’















