சுதந்திரமான ஊடகம் என்பது ஒரு எதிரி அல்ல!அமேரிக்கா

You are currently viewing சுதந்திரமான ஊடகம் என்பது  ஒரு எதிரி அல்ல!அமேரிக்கா

இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உள்ளடக்கத்தை தணிக்கை செய்வதன் மூலமும் பொதுமக்களிடமிருந்து தகவல்களைத் தடுக்கும் முயற்சிகளை அரசாங்கங்கள் தீவிரப்படுத்தும்போது, அதற்கெதிராக நாம் குரல்கொடுக்க வேண்டுமென பொது உறவுகளுக்கான துணை இராஜாங்க செயலாளர் எலிசபெத் அலன் தெரவித்தார்.

இலங்கையின் பாராளுமன்றம் ஜனவரி மாதம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை நிறைவேற்றியபோது, கருத்துச் சுதந்திரம், புத்தாக்கம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றில் அது ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான விளைவுகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது என்றும் குறிப்பிட்டார்.

“உலகளாவிய ஊடக பரப்பும் ஜனநாயகத்தின் மீதான அதன் தாக்கமும்”என்ற தொனிப்பொருளில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் ஏற்பாட்டில் 19 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமெரிக்க பொது இராஜதந்திரத்திற்கான துணைச் செயலாளர் எலிசபெத் எம். அலன்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய அமெரிக்க பொது இராஜதந்திரத்திற்கான துணைச் செயலாளர் எலிசபெத் எம். அலன் ,

இன்று எல்லோருடனும் இங்கு இருப்பது அருமையாக இருக்கிறது. மேலும் தூதுவர் சங் அவர்களே, இலங்கையில் அமெரிக்க மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உங்களது தலைமைத்துவத்திற்கு நன்றி.

இலங்கை பத்திரிகை நிறுவனத்திற்கு நன்றி, நான் இன்று இங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஊடகவியலின் கைவினைப் பணியில் நீங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பானது மிகவும் ஊக்கமளிக்கிறது.

இதை அறிந்து கொள்ளுங்கள்: நீங்கள் மேற்கொள்ளும் அபாரமான பணியை அமெரிக்கத் தூதரகம் முழுமையாக ஆதரிக்கிறது. நிச்சயமாக, ஒரு செய்தி தொடர்பாக அவ்வப்போது நாங்கள் முட்டிக் கொண்டாலும், அவையனைத்தையும் தாண்டி, நாங்கள் உங்களது மிகப்பெரிய ரசிகர்கள்.

சுதந்திரமாகவும் அச்சமின்றியும் ஊடகவியலைத் தொடர்வதற்கு உங்களுக்கு உரிமையுண்டு என நாங்கள் நம்புவதால், உங்களது திறமைகளை கூர்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களில் நாங்கள் அனைவரும் ஈடுபட்டுள்ளோம்.

ஊடகவியலாளர்கள் நிரம்பிய ஒரு அறையில் நான் நிற்கையில், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாத்ததற்காகவும், அனைத்து குடிமக்களும் தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் வெளிப்படுத்தும் உரிமையை அனுபவிப்பதை உறுதிசெய்ததற்காகவும் நான் உங்களுக்கு நன்றிகூற விரும்புகிறேன்.

கடினமான நேரங்களிலும், தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதை நீங்கள் தொடர்வதுடன் கடினமான கேள்விகளையும் கேட்கிறீர்கள். உண்மையைத் தேடுவதற்கும், உயரமான முகடுகளிலிருந்து அதை உரத்துக் கூறுவதற்குமான உங்களது அர்ப்பணிப்பானது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. உங்களது பணியினை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

 

ஒரு ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு பற்றிய இன்றைய தலைப்புடன் தொடர்புடையதென நான் கருதும் ஒரு கதையினைக்கூறி எனது உரையினைத் தொடங்குவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

ஒரு நூற்றாண்டிற்கு முன்பு, ஊழலை அம்பலப்படுத்தும் சமூகப் பிரச்சினைகளை ஆராய்ந்த பத்திரிகையாளர்களைக் குறிப்பிடுவதற்கு “மக்ரேக்கர்” என்ற சொற்பதத்தினை அமெரிக்க ஊடகங்கள் உருவாக்கின.

இந்தச் சொற்பதம், இந்த ஊடகவியலாளர்களை வெறும் “வதந்தி பரப்புபவர்கள்” என்று முத்திரை குத்தி சற்றே எதிர்மறையான பொருளை வௌிப்படுத்தினாலும், இன்று அவர்களை புலனாய்வு ஊடகவியலின் முன்னோடிகள் என நாம் கௌரவிக்கின்றோம்.

அமெரிக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க சமூக மற்றும் அரசியல் சீர்திருத்த காலமான முற்போக்கு சகாப்தத்தை உருவாக்குவதில் இந்த மக்ரேக்கர்கள் ஒரு முக்கிய பங்கினை வகித்தனர்.

ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டி பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தத்திற்கான நாடு தழுவிய ஒரு கோரிக்கையினைத் தூண்டிய பணியினை மேற்கொண்ட லிங்கன் ஸ்டெஃபென்ஸ் போன்ற நபர்களைக் குறிப்பிட்டு சமூகத்தின் குறைபாடுகளில் அவர்கள் கவனம் செலுத்துவதை விமர்சித்து ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் கூட அவர்களை “மக்ரேக்கர்கள்” என்று குறிப்பிட்டார்.

1904 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்டெஃபென்ஸின் புத்தகமான ‘த ஷேம் ஒஃப் த சிட்டீஸ்’, அரசியல் தலைவர்கள், வணிகங்கள் மற்றும்  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு இடையிலான மோசமான தொடர்புகளை எடுத்துக்காட்டி அமெரிக்க நகரங்களில் நிலவிய ஊழலை வெளிக்கொணர்ந்ததற்காக அவரைப் புகழ் பெறச்செய்தது.

அரசு மற்றும் பெருநிறுவனங்கள் என்பன பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசரத் தேவை குறித்து விமர்சன ரீதியான விழிப்புணர்வை அவரது அச்சமற்ற ஊடகவியல் ஏற்படுத்தியது.

அரசாங்கத்தின் ஒரு மக்கள் தொடர்பு அதிகாரியாக ஸ்டெஃபென்ஸ் செயற்படவில்லை; எவ்வளவு விரும்பத்தகாததாக இருந்தபோதும் உண்மையை வெளிக்கொணர்வதே அவரது பங்காக அமைந்தது.

ஸ்டெஃபென்ஸ் முன்வைத்த அப்பட்டமான உண்மைகளுக்கு முகங்கொடுத்த அமெரிக்க அதிகாரிகளும் பொதுமக்களும் ஒரு முக்கிய கேள்வியை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர்:

‘இதுபோன்ற நாடாகவா நாங்கள் இருக்க விரும்புகிறோம்?’ என்ற அந்தக் கேள்விக்கு இல்லை என்ற பதில் ஒருமித்த பேரொலியாக வௌிப்பட்டது.

ஸ்டெஃபென்ஸின் பணியானது தவறுகளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை ; அது சீர்திருத்தத்திற்கான நாடு தழுவிய ஒரு கோரிக்கையினைத் தூண்டியதுடன் அதிகாரமானது பொறுப்புக்கூறலுக்குட்பட்டிருப்பதை உறுதி செய்வதில் புலனாய்வு ஊடகவியல் வகிக்கும் முக்கிய பங்கு தொடர்பான ஒரு உரையாடலைப் பேணிவளர்ப்பதிலும் ஒரு இன்றியமையாத பங்கினை அது வகித்தது.

பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பன அடிப்படை மனித உரிமைகள் மட்டுமன்றி, ஒரு நாட்டின் அபிவிருத்தியிலும்வளர்ச்சியிலும் அவை முக்கிய பங்காற்றுகின்றன என்பதையும் இந்தக் கதை எடுத்துக்காட்டுகிறது.

உலகளாவிய ஊடக வெளியானது எவ்வாறு ஜனநாயகத்தை ஆதரித்து அமைதியான, நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகங்களை வளர்க்கிறது என்பது பற்றி நான் கூற விரும்பும் முக்கிய கருத்திற்கு இது என்னை இட்டுச் செல்கிறது.

எனது மனதில், அந்தத்தொடர்பு தெளிவாக உள்ளது: ஒரு அரசாங்கம் தனது குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை கட்டுப்படுத்தும் போது, அந்நாட்டின் எதிர்காலமும் அபிவிருத்தியும் இயல்பாகவே பாதிக்கப்படும்.

உலகளாவிய ரீதியில், ஊடக சுதந்திரத்திற்கு எதிரான தீவிரமான மற்றும் அதிகரித்து வரும் சவால்களை நாம் காண்கிறோம். நிகழ்நிலையிலும் அகல்நிலையிலும் பத்திரிகை சுதந்திரத்திற்காக வாதிட்டு, உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது.

துரதிஷ்டவசமாக, இந்த அத்தியாவசிய சுதந்திரங்கள் உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இலங்கையில் எழுப்பப்பட்ட கரிசனைகளும் இதிலடங்கும்.

இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உள்ளடக்கத்தை தணிக்கை செய்வதன் மூலமும் பொதுமக்களிடமிருந்து தகவல்களைத் தடுக்கும் முயற்சிகளை அரசாங்கங்கள் தீவிரப்படுத்தும்போது, அதற்கெதிராக நாம் பேச வேண்டும்.

இலங்கையின் பாராளுமன்றம் ஜனவரி மாதம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை நிறைவேற்றியபோது, கருத்துச் சுதந்திரம், புத்தாக்கம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றில் அது ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான விளைவுகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாடற்ற கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வாதங்கள் முன்வைக்கப்படுவது ஒரு பொதுவான விடயமாகும். அரசாங்கங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதையும் பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ள ஊடகங்கள் பக்கச்சார்பானவை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கட்டுப்பாடுகளற்ற நிலையில் கருத்துச் சுதந்திரமானது தவறான தகவல்கள் பரவுவதை ஊக்குவிக்கலாமென ஏனையவர்கள் கவலைப்படுகிறார்கள். கட்டுப்பாடுகளற்ற பத்திரிகைகள் பதற்றத்தைத் தூண்டி பாதுகாப்பு நிலைமைகளை பாதிப்பிற்குட்படுத்தலாமென வேறு சிலர் வாதிடுகின்றனர்.

ஊழல், வன்முறை மற்றும் அரசியல் முரண்பாடுகள் தொடர்பான தொடர்ச்சியான அறிக்கைகள் ஒரு நாட்டின் நற்பெயரைக் கெடுத்து, முதலீட்டு முயற்சிகளை பின்னடைவிற்குட்படுத்தி நாட்டின் அபிவிருத்தியைத் தடைசெய்யலாமென்ற கரிசனைகளும் காணப்படுகின்றன.

இருப்பினும் ஊடகங்களின் பக்கச்சார்பானது, தலைவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும் பாதுகாவலர்களாக செயற்பட்டு, பொதுமக்களின் நலன்களை நோக்கி சாய்தல் வேண்டும். இலங்கைக்கும், அமெரிக்காவிற்கும், முழு உலகிற்கும் இக்கொள்கை பொருத்தமானதாகும்.

பெரும்பாலும் “போலிச் செய்திகள்” அல்லது “பக்கச்சார்பான ஊடகவியல்” என முத்திரை குத்தப்படும் எதிர்மறையான பத்திரிகைகளால் ஏற்படும் சவாலானது ஒரு புதிய விடயமல்ல.

பலதலைமுறைகளாக, அரசாங்கங்களும் ஊடகங்களும் ஒரு சிக்கலான, சில சமயங்களில் விரோதமான உறவுகளினூடே பயணித்துள்ளன.

இந்த இயக்கவியலானது எந்தவொரு நாட்டிற்கும் தனித்துவமான ஒரு விடயமல்ல உதாரணமாக, ஐக்கிய அமெரிக்காவில், இரு பிரதான அரசியல் கட்சிகளையும் சேர்ந்த ஜனாதிபதிகள் பத்திரிகையாளர்களுடன் முரண்படுவதில் தங்கள் பங்கை அனுபவித்திருக்கிறார்கள். ஜனநாயக சமூகங்களின் ஒரு தனிச்சிறப்பான இப்பதற்றமானது வெளிப்படைத்தன்மையை பேணிவளர்ப்பதிலும் செயல்விளைவுள்ள நிர்வாகத்தை ஊக்குவிப்பதிலும் ஒரு இன்றியமையாத பங்கினை வகிக்கிறது.

விசேடமாக தலைவர்கள் அவர்களது நடவடிக்கைகள் தவறாக சித்தரிக்கப்படுவதாக உணரும்போது, தவறான மற்றும் பக்கச்சார்பான அறிக்கையிடல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்து அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் சூடான கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுவதானது ஒரு வழக்கமான காட்சியாகும்.

அரசாங்கத்தின் சாதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், கொள்கைகள் அல்லது நிகழ்ச்சித்திட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும், உண்மைகளை உள்ளபடியே மக்களுக்கு வழங்குவதும் பத்திரிகைகளின் கடமையாகும்.

பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமன்றி இந்த வெளிப்படைத்தன்மையானது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதால் தேசத்தையும் பலப்படுத்துகிறது.

அத்துடன் குரல்களை அடக்குவதானது விடயங்களை மேலும் சிக்கலாக்குகிறது. சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றை மறைக்க முயற்சிப்பது உடைந்த ஒரு கருவியை சரிசெய்வதற்குப் பதிலாக அதை மறைப்பதற்குச் சமமாகும். உண்மையான முன்னேற்றம் என்பது ஒன்றிணைந்த உரையாடல்களிலிருந்து வருகிறது, அது பொது உரையாடலின் குழப்பத்தைத் தழுவுவதாக இருந்தபோதும் கூட. · “நல்ல யோசனைகள் இறப்பதற்காகச் செல்லுமிடம்” என அழைக்கப்படும்

படைப்புச் சிந்தனையாளர்களுக்கான ஒரு மையமான கொழும்பில் உள்ள IdeaHell இற்கு நான் மேற்கொண்ட சமீபத்திய விஜயத்தின் போது இவ்விடயம் தெளிவாகத் தெரிந்தது.

படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் அச்சமின்றி புதிய விடயங்களை முயன்று பார்ப்பதற்கும் புத்தாக்கங்களை உருவாக்குவதற்குமான சுதந்திரத்தைப்பாதுகாக்க வேண்டிய தீவிரமான தேவையினை அங்கிருந்த இளம், புத்தாக்கசிந்தனையுடையவர்களுடனான எனது தொடர்பாடல் அடிக்கோடிட்டுக் காட்டியது. ஆம், சில நல்ல சிந்தனைகள் இறப்பதுண்டு, எனினும் படைப்பாளிகள் சிந்திப்பதற்கும் முயற்சி செய்வதற்கும் மற்றும் தோல்வியடைவதற்கும் கூட அவர்களுக்குத் தேவையான சுதந்திரம் காணப்படுதல் அவசியமாகும். அவ்வாறுதான் நாம் முன்னேற்றமடைகிறோம்.

கருத்துச்சுதந்திரத்தின் மீதான மிகவும் பரந்த மற்றும் தெளிவற்ற கட்டுப்பாடுகள் படைப்பாற்றலை மூச்சுத்திணறலுக்குட்படுத்தி, புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைத் தூண்டக்கூடிய சாத்தியமான முன்னேற்றங்களை சமுதாயத்திடமிருந்து பறித்துவிடும்.

தணிக்கை செய்யப்படும் ஒரு நிலையானது புத்தாக்கத்தினைத் தடுப்பது மட்டுமன்றி, கடுமையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நவீன தீர்வுகளைக் கையாளும் சமூகத்தின் உற்சாகத்தினையும் அது தளர்வடையச் செய்கிறது.

ஊடகவியலை நோக்கி உங்களை ஈர்த்த அந்த ஆரம்ப தீப்பொறியைப் பற்றி சிந்திக்குமாறு நான் உங்களிடம் கேட்கிறேன். அது செல்வச் செழிப்பு அல்லது புகழின் கவர்ச்சியாக இருந்திருக்கும் என்பது சந்தேகமே அது அனேகமாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இலங்கையின் முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்வதற்குமான ஒரு உத்வேகமாகவே அமைந்திருக்கும். இவை உங்களை இயக்கும் சக்திகளாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், விடாமுயற்சியுடன் செயற்படுமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

உங்களது அர்ப்பணிப்பு, உங்களது உரிமைகள் மற்றும் உங்களது சுதந்திரம் என்பன இத்தேசத்தின் தற்போதைய வளர்ச்சி மற்றும் செழிப்பிற்கு மிகவும் முக்கியமானதாகும்.

இதைக் கருத்திற்கொள்ளுங்கள்: உங்களில், நவீனகால லிங்கன் ஸ்டெஃபென்ஸாக உருவெடுக்கப்போவது யார்? இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் கதைகளை எழுதப்போவது யார்? அந்த நபர் இன்று இப்போது எம்மிடையே இருக்கலாம்.

 

பேச்சுச் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் மற்றும் கட்டுப்படுத்தப்படாத கருத்துப் பரிமாற்றம் ஆகிய விடயங்களுக்காகக் குரல் கொடுப்பதற்கு அவர் தயாராக இருக்கலாம்.

சுதந்திரமான பத்திரிகை என்பது இலங்கையின் ஒரு எதிரி அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும். ஒரு மீண்டெழும் தன்மையுள்ள மற்றும் செழிப்பான சமுதாயத்திற்கு வழி வகுக்கும் அது இலங்கையின் மிகப்பெரிய நண்பர்களுள் ஒன்றாகும் என்று மேலும் தெரிவித்தார்.

சுதந்திரமான ஊடகம் என்பது ஒரு எதிரி அல்ல!அமேரிக்கா 1

பகிர்ந்துகொள்ள

Leave a Reply