சுவிஸில் வருகின்ற திங்கள், 11ம் திகதி தொடக்கம் கட்டாயப்பாடசாலைகள், பொழுது போக்கு நிலையங்கள், உணவகங்கள், ஏனைய கடைகள் திறக்கப்படும் இவ்வேளையில் மக்கள் அனைவரும் சில ஒழுங்குமுறைகளிற்கு கீழ்ப்படியாக நடந்து கொள்வது அவசியம் என சுவிஸ் கூட்டாட்சி ஊடகமாநாடு, பிரசுரங்கள், சமூகவலைத்தளங்களினூடாக மக்களிற்கு எச்சரிக்கை விடுக்கின்றது.
அந்த வகையில் முதலாவது முக்கியமானதாக தொடர்ந்தும் கைகளை ஒழுங்காக கழுவி, பிறரிற்கு இடையில் இடைவேளையைப்பேணுவதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்தும் கை குலுக்குவது தவிர்க்கப்பட வேண்டியதாகும். இருமல் அல்லது தைத்தல் ஏற்படும்போது கைக்குட்டைக்குள் அல்லது முழங்கை மடிப்பிற்குள் தும்முதல் அல்லது இருமுதல் வேண்டும்.
11ம் திகதி தொடக்கம் பொது போக்குவரத்துச்சேவைகள் அனைத்தும் வழமைக்குத்திரும்பும் போதிலும் – கல்வி, வேலை, அத்தியாவசிய தேவைகள் தவிர ஏனைய அநாவசிய விடயங்களிற்கு பொது போக்குவரத்துச்சேவையை மாற்றுவதை தவிர்க்கவும். முக்கியமாக காலை, மாலை பெரும்பாலானவர்கள் பயணிக்கும் வேளையில் தேவையற்று செல்வது தவிர்க்கப்படுவது முக்கியமாகும்.
சுகாதார முகக்கவசங்களை அணிவது அவசியமல்ல. ஆனால் இடைவெளியைப்பேணிவது தவிர்க்கப்பட முடியாத பட்சத்தில் சரியான முறையில் அணியப்பட வேண்டும்.
பொது இடங்களிலும், வீட்டிலும் நண்பர்களை சந்திப்பதில் ஆகக்கூடியது ஐந்து பேர் மட்டுமே சந்திக்க முடியும். அவ்வாறான சந்திப்பிலும் சுகாதாரத்தைப் பேணுவது முக்கியமாகும் என தற்போதைய சூழ்நிலையில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் பற்றி சுவிஸ் அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
(நிதுர்ஷனா ரவீந்திரன்)