சூடானில் தீவிரமடைந்து வரும் மோதலால் இதுவரை கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூடானில் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையிலான சண்டையில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,800 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் தெரியவந்துள்ளது.
சூடானில் 2021ல் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றிய அந்த நாட்டின் இராணுவ தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான்(Abdel Fattah al-Burhan) மற்றும் துணை ராணுவ விரைவு ஆதரவு படைகளுக்கு கட்டளையிடும் துணை தலைவர் முகமது ஹம்தான் டாக்லோ(Mohamed Hamdan Daglo) ஆகிய இருக்கும் இடையே ஒரு வார காலமாக அதிகாரப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் சனிக்கிழமை அவை கொடிய வன்முறையாக வெடித்தது.
இதனால் ரமலான் மாதத்தின் கடைசி மற்றும் புனிதமான நாட்களில் சூடான் மக்கள் தங்கள் தலைநகரின் தெருக்களில் டாங்கிகள் உருளுவதையும், துப்பாக்கி சண்டையில் தூண்டப்படும் தீ மற்றும் புகைகளையும் ஜன்னலில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
அத்துடன் மூன்று நாட்களாக தொடரும் சண்டைகளுக்குப் பிறகு நாட்டில் மருத்துவ பொருட்கள் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது.
மின்தடைகள் மக்களை அவதிக்கு தள்ளி இருக்கும் அதே வேளையில், திறந்துள்ள கடைகளில் ரொட்டி மற்றும் பெட்ரோலுக்கு மக்கள் நீண்ட வரிசையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பிராந்திய மற்றும் பல்வேறு உலக நாடுகளிடம் இருந்து போர் நிறுத்த அழைப்புகள் மற்றும் ராஜதந்திர அணிதிரள்கள் இருந்தாலும், சூடானில் நீண்ட காலமாக இருந்து வரும் நிலையற்ற ஆட்சி மற்றும் தலைநகர் கார்டூமில்(Khartoum) நடக்கும் முன்னோடியில்லாத சண்டை, இந்த மோதல் போக்கை நீடித்த ஒன்றாக மாற்றலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளார்.
சூடானுக்கான ஐக்கிய நாடுகளின் தூதரகத்தின் தலைவரான வோல்கர் பெர்தஸ், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் குறைந்தது 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 1,800 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக திங்கட்கிழமை, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், சூடானில் சண்டையிடும் இரண்டு தரப்புகளும் உடனடியாக விரோதத்தை நிறுத்தி வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் தாக்குதல் அதிகரிப்பு என்பது நாட்டிற்கும், பிராந்தியத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.