கார்டாம், வட கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், பயந்து ஓடிய அப்பாவி மக்கள் மீது, துணை ராணுவப்படையினர், கடந்த மூன்று நாட்களாக நடத்திய தாக்குதலில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
சூடானில் 2023 முதல், ராணுவ தளபதி அப்துல் பட்டா அல் – பர்ஹான் மற்றும் அவரது முன்னாள் உதவி தளபதி முகமது ஹம்தான் டாக்லோ தலைமையிலான, ஆர்.எஸ்.எப்., எனும் துணை ராணுவ படையினருக்கும் இடையே நடந்து வரும் சண்டையில், பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இரு தரப்பு மோதலுக்கு அஞ்சி, நைல் நதியோரம் உள்ள கிராமங்களில் இருந்து, தப்பி ஓடிய அப்பாவி பொதுமக்கள் மீது, ஆர்.எஸ்.எப்., துணை ராணுவப்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். கடந்த மூன்று நாட்களாக நடத்தப்பட்ட தாக்குதலில், 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக, எமர்ஜென்சி லாயர்ஸ் என்ற அமைப்பு குற்றஞ்சாட்டிஉள்ளது.
கடந்த சனிக்கிழமை துவங்கிய தாக்குதலில், அப்பாவி மக்கள் பலர் கடத்தப்பட்டனர்; பலர் மாயமாகினர்; பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. தாக்குதலுக்கு பயந்து தப்பியோடியோர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; பல நுாறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவித்துள்ள எமர்ஜென்சி லாயர்ஸ் அமைப்பு, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் ராணுவம் இல்லை. எனினும், அங்கு தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை என கூறியுள்ளது.