முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது திருச்சி விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தன் என அழைக்கப்படும் ரி சுரேந்திரராஜா திருச்சி முகாமில் தனது வாழ்க்கை குறித்து தெரிவிக்கும் கடிதமொன்றை எழுதியுள்ளார்.
சூரிய ஒளிகூட என் மேல் படுவதில்லை என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன் என அழைக்கப்படும் ரி சுரேந்திரராஜா – 2022 நவம்பர் 11 ம் திகதி அவரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது, எனினும் அவர் பயஸ் முருகன் ஜெயக்குமாருடன் திருச்சி விசேட முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
முகாமிலிருந்து அனுப்பியுள்ள கடிதத்தில் சாந்தன் சூரிய ஒளி கூட தன்மீது படாத அந்த முகாம் வாழ்க்கை குறித்து தெரிவித்துள்ளார்.
உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் தனக்கு ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அதன் மூலம் தான் நாட்டிற்கு திரும்பும் நிலை உருவாகலாம் என தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் உள்துறை அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு தன்னை இலங்கைக்கு அனுப்புமாறு கேட்டு பலமுறை கடிதங்களை அனுப்பியுள்ள போதிலும் இதுவரை எந்த பதிலும் இல்லை என தெரிவித்துள்ள அவர் தன்னை அடையாளப்படுத்துவதற்கான ஆவணங்களை புதுப்பிப்பதற்காக சென்னையில் உள்ள இலங்கை துணைதூதரகத்திற்கு செல்வதற்கான அனுமதியையும் தான் கோரியிருந்ததாகவும் அதற்கும் பதில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களாக நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளேன் இங்கு 120 வெளிநாட்டவர்கள் உள்ளனர் அவர்களில் 90 பேர் இலங்கையர்கள் என சாந்தன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முகாமில் உள்ள தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள் மத்தியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என தெரிவித்துள்ள அவர் ராஜீவ் காந்தி வழக்கில் நீதிமன்றத்தினால் விடுதலைசெய்யப்பட்ட நால்வரும் உள்ளோம் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஜன்னல்கள் முழுமையாக மூடப்பட்ட அறைகளில் நாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரொபேட்டும் ஜெயக்குமாரும் ஒரு அறையில் உள்ளனர் முருகனும் நானும் ஒரு அறையில் இருக்கின்றோம்,ஆனால் இந்த அறைகள் அருகில் இல்லை. எங்களால் ஒருவருடன் ஒருவர் கதைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி மூலம் பேசுவதற்கு கூட எனக்கு அனுமதியில்லை குடும்ப உறவினர்கள் மாத்திரம் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பார்க்க சந்திக்க முடியும் எனவும் சாந்தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
என்னை போன்ற வெளிநாட்டவர் ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் இருப்பது எப்படி சாத்தியம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் ஒரு நாளைக்கு 175 ருபாய் வழங்குகின்றது என உருக்கமான அந்த கடிதத்தில் தெரிவித்துள்ள சாந்தன் 32 வருடங்களாக நான் அம்மாவை பார்க்கவில்லை தந்தையின் இறுதிகாலங்களில் என்னால் அவருடன் இருக்க முடியவில்லை,இது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
அம்மாவின் இறுதிகாலங்களில் அவருடன் இருக்கவேண்டும் என்ற எனது விருப்பம் தவறானது என்றால் யாரும் எனக்கு உதவவேண்டியதில்லை எனவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.