செஞ்சிலுவை சங்க அலுவலகம் அருகே இஸ்ரேல் ராணுவத்தின் கொடுஞ்செயல்!

You are currently viewing செஞ்சிலுவை சங்க அலுவலகம் அருகே இஸ்ரேல் ராணுவத்தின் கொடுஞ்செயல்!

காஸாவில் செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் அருகே இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்த கண்மூடித்தனமான தாக்குதலில் கொத்தாக பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தாக்குதலில் செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் சேதமடைந்துள்ளதுடன், இறப்பு எண்ணிக்கை 22 என கூறப்படுகிறது. தொடர்புடைய அலுவலகத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் கூடாரங்களில் வசிக்கின்றனர்.

ஹமாஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில், 25 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 50 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், போருக்கு பயந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் முன்னெடுத்துள்ளதாகவும் ஹமாஸ் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனிடையே, தாக்குதலுக்கு இலக்கான மக்களுக்கு உதவ சென்றவர்களும் அடுத்த தாக்குதலில் பலியானதாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் சக்தி வாய்ந்த ஆயுதங்களால் தாக்குதல் முன்னெடுத்தவர்கள் யார் என்பதை குறிப்பிடாமல்,

அலுவலகம் சேதமடைந்துள்ளது, மக்கள் பல கொல்லப்பட்டுள்ளனர் என்பதை மட்டும் செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மேலும், 22 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 45 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் குறிப்பிட்டு,

அவர்களை அருகாமையில் உள்ள செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தெற்கு நகரமான ரஃபா மீது இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்த நிலையில், Al-Mawasi பாதுகாப்பான பகுதி என பாலஸ்தீன மக்களை அப்பகுதிக்கு செல்ல இஸ்ரேல் தூண்டியது.

ஆனால் தற்போது Al-Mawasi பகுதியிலேயே கொடூர தாக்குதலையும் முன்னெடுத்துள்ளது. தெற்கு காசாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கான முகாம் மீது இஸ்ரேலிய ராணுவம் முன்னெடுத்த தாக்குதல் காரணமாக கொடிய தீ விபத்து ஏற்பட்டு சில வாரங்களேயான நிலையில், தற்போது இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தாக்குதலானது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்ததுடன், பல நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தது. வெள்ளிக்கிழமை மட்டும் காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் மொத்தம் 45 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 9 மாதங்களில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 37,400 கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply