செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்!

You are currently viewing செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்!

செஞ்சோலை படுகொலையின் நினைவு வணக்க நாள் இன்றாகும். முல்லைத்தீவு மாவட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் 14.08.2006 அன்று சிங்கள அரசுகளின் வான்படையின் குண்டு வீச்ச்சுத்தாக்குதலில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களின் 15 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் .! செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்………!

செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்! 1

தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்! 2

காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர் அலறியடித்தவாறு செஞ்சோலை வளாகத்துக்கு ஓடிவந்தனர். கொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளையும் உள்ளாளா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்ட தமது பிள்ளை தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் அங்கிருந்த அனைவரையும் அழவைத்தது. “பத்து நாளும் என்னால விட்டிட்டு இருக்க ஏலாதுண்டு முதலில் மாட்டேன் என்டுதான் சொன்னன். ஆனால், நல்ல விஷயம் எண்டு எல்லாரும் சொன்னதால தான் விட்டனான். கடைசியில இப்படியாப்போச்சு” என தலையில் அடித்து கதறிய தாயாரொருவர் தன் மகளைத் தூக்கி வா வீட்ட போவோம் என கேட்டதும் அனைவரும் கதறியழுதனர்.செஞ்சோலை வளாகத்தில் அப்பாவி மாணவிகளை தறிகெட்ட சிங்களப் படை கொன்றது மாத்திரமல்லாமல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள சிறுவர் போராளிகளெனக் கூறி வெளியுலகுக்கு உண்மையை மூடிமறைக்க இனவெறி அரசாங்கம் முயல்வது அனைவரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது.

செஞ்சோலை வளாகம் புலிகளின் பயிற்சி முகாமெனவும் அங்கு சிறுவயது போராளிகளே இருந்ததாகவும் கூறி 2004 ஆம் ஆண்டு தமது விமானமொன்று எடுத்த படமொன்றையும் காட்டியுள்ளன காட்டுமிராண்டிப் படைகள். இதைவிட ஒருபடி மேலே சென்ற பேரினவாத அரசின் அமைச்சரும் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக பேசவல்லவருமான கெஹகிலிய ரம்புக்வெல,” கொல்லப்பட்டது சிறுவயது போராளிகள். அரசுக்கெதிராக செயற்படும் எவராயினும் அதாவது வயது, பால் வேறுபாடின்றி கொல்வோம்” என தமது அரசும் இனவெறிபிடித்தே அலைகின்றது என்பதனை பறைசாற்றினார்.ஆனால், சம்பவ இடத்திற்கும் வைத்தியசாலைகளும் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் `யுனிசெப்’பும் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மாணவிகள் என்பதனை வெளிப்படுத்தியது. எனினும், தனது பொய்ப் பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்த ஜனாதிபதி இந்த பொய்யையே மீண்டும் கூறியுள்ளார்.இதேவேளை, இந்த தாக்குதல்களுக்கு பழிக்குப் பழிவாங்கிவிடுவார்களென்ற அச்சத்தில் தெற்கிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அப்படியானால் அங்கே வல்லிபுனத்தில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மாணவிகள் தான் என்பதனை அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை எவரும் இலகுவில் புரிந்துகொள்வார்கள். பத்துநாள் பயிற்சிப்பட்டறை உண்மையில் கொல்லப்பட்டவர்கள் யார்?

செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்! 3


ஏன் அங்கு கூடியிருந்தார்கள்?காலை 7 மணிக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வல்லிபுனம் மக்கள் குடியிருப்புகள் நெருக்கமாகவுள்ள பகுதி. குடாநாட்டிலிருந்து 1995 இல் இடம்பெயர்ந்து வன்னிக்கு சென்றவர்களுக்கு இதை நன்கு உணர்ந்து கொள்ளமுடியும். அங்கு தான் `செஞ்சோலை’ வளாகமும் உள்ளது. செஞ்சோலை என்றதும் தாயகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றாக தெரியும்.
இந்த வளாகத்திலுள்ள அருகில் பல நலன்புரி நிலையங்கள், வேறு பல சிறுவர் இல்லங்கள் என பலவுள்ளன. மனிதநேய நடவடிக்கைகள் நிறைந்த ஒரு பகுதியே வல்லிபுனம். இந்த செஞ்சோலை வளாகத்தில் தற்போது செஞ்சோலை சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்தவர்களில்லை. இந்த வருடம் ஜனவரியில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட புதிய வளாகத்துக்கு சிறுமியர்கள் சென்றுவிட்டனர்.

ஆனால், வள்ளிபுனம் – செஞ்சோலை வளாகம் தொடர்ந்தும் செஞ்சோலை வளாகமாகவே உள்ளது. இங்கு வதிவிட பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்படுவது வழமையானதொன்று. காரணம் ஏற்கனவே சிறுமியர் இல்லமாக இது செயற்பட்டமையால் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக இவ்வளாகம் இருப்பதே. அத்துடன், இந்த வளாகம் ஐ.நா. அமைப்புகளூடாக பயிற்சிப் பட்டறைக்கான இடமென இலங்கை அரசாங்கத்தாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால் இங்க பல பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றுவந்தன. அதேபோன்றதொரு பயிற்சிப் பட்டறை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இலங்கை அரசின் விமானப் படை கோரத்தாண்டவமாடி தமிழரை துன்பத்தில் வாடவிட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி முதல் இச்செஞ்சோலை வளாகத்தில் க.பொ.த. உயர்தர மாணவிகளுக்கான 10 நாள் வதிவிட பயிற்சி நெறி நடைபெற்றுவந்தது.

செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்! 4

இந்தப் பயிற்சி நெறியின் 3 ஆம் நாளின் போதே இப்பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சமூக தலைமைத்துவ திறன்கள், முதலுதவி, பால் சமத்துவம் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல், வினைத்திறனுடனான நேர முகாமை மற்றும் குழு வேலை போன்றவற்றில் மாணவிகளுக்கு பயிற்சியளிப்பதனை நோக்கமாகக் கொண்டே இப்பயிற்சிப் பட்டறை நடைபெற்று வந்தது. இதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 500 க.பொ.த. உயர்தர மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர் எனத் தெரியவருகின்றது. செய்தி கேட்டுக்கொண்டிருந்த மாணவிகளே அதிகளவில் கொல்லப்பட்டனர். “காலை 7 மணியளவில் மாணவிகள் ஒன்றுகூடலுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் தற்போதைய யுத்த சூழ்நிலை குறித்து அறிய வானொலியில் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.இதன்போதே விமானங்கள் வட்டமிட்டு 16 குண்டுகளை அடுத்தடுத்து வீசின. செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களே நேரடியாக தாக்குதலுக்கு இலக்காகினர். இதில் அதிகளவானோர் கொல்லப்பட்டதுடன் பலருக்கு பின்புறத்தில் மோசமான காயங்கள் ஏற்பட்டன. வேறு வேலைகளிலிருந்த மாணவிகள் அருகேயிருந்த காட்டுப் பகுதிகளுக்குள் ஓடிவிட்டனர்” என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்திருக்கும் இடைக்கால அறிக்கை கூறுகின்றது. தீயிலிருந்தும் மின்னிலிருந்தும் எவ்வாறு தப்புவது, அதேபோல இரசாயன பதார்த்தங்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாயிருப்பது, விமான தாக்குதல்களிலிருந்து எவ்வாறு தப்புவது, நாடகங்கள், இசை, நகைச்சுவை மூலமான தனிநபர் வெளிப்பாடுகள் போன்ற பயிற்சிகள் ஆசிரியர்களாலும் துறைசார் நிபுணர்களாலும் கற்பிக்கப்பட்டதாக அவ்அறிக்கை தெரிவிக்கின்றது. இதேவேளை, இந்தப் பயிற்சிப்பட்டறை குறித்து தமிழீழ கல்விக் கழக பொறுப்பாளர் இளங்குமரன் கூறுகையில்; “இதுவொரு வருடாந்த பயிற்சிப்பட்டறை. கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறிக்கு பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் நிதியுதவியையும் ஆதரவையும் வழங்கியிருந்தது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட 18 பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவிகளும் வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பெண்களும் இப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர். சிங்கள அரசு தமிழ்ச் சமூகத்தின் கல்வி உரிமையை மறுத்துள்ளது. வரலாற்றில் சிங்கள தீவிர வாதிகள் எப்போதும் தாக்கியே வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுவது இதுதான் முதற்தடவையல்ல. அரசின் முப்படைகளினதும் வெறியாட்டத்தால் அப்பாவித் தமிழர்கள் பட்டபாடு வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது.

ஏனெனில் அந்த வலியை பதிவுசெய்யும் ஆற்றல் இந்த வார்த்தைகளுக்கு இல்லை. இரு தசாப்தங்களுக்கு மேலாக தொடரும் போரில் பேரினவாத அரச படைகள் பாவித்த மிகப் பயங்கரமான விமானங்கள் பல. அவை விடுதலைப் புலிகளை தாக்கியதை விட பொதுமக்களையே பலிகொண்டன. இன்று தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறி புலத்திலுள்ளவர்களானாலும் சரி வட, கிழக்குக்கு வெளியே இருக்கும் வளர்ந்தவர்களானாலும் சரி விமானத் தாக்குதல்களில் அனுபவப்பட்டவர்களாக இருப்பார்கள். அன்று ஹெலி, சீ.பிளேன், சியாமாச் செட்டி, அன்ரனோவ், சகடை ( பட்டப்பெயர்), புக்காரா என தொடங்கி தமிழரின் உயிர்குடித்த விமானங்கள் தாயகத்தின் வானில் தலைகாட்ட முடியாத நிலையில் `மிக்’ என்றும் `கிபிர்’ என்றும் `சுப்பசொனிக்’ என்றும் அப்பாவி தமிழரின் உயிர்குடிக்க அனுப்பப்படுகின்றன. இலங்கை விமானப் படைகள் தமிழர் தாயகத்தின் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் ஏராளம். இதில் பள்ளி மாணவர்கள், பச்சிளம் குழந்தைகளை வகைதொகையின்றி பலியெடுத்த வரலாறு மிகக் கொடியது. நாகர்கோவில் மத்திய பாடசாலை சிறார்களின் படுகொலை அன்று 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி சின்னஞ்சிறுசுகளின் கலகலப்பான பேச்சுக்களுடன் நாகர் கோவில் மத்திய பாடசாலை பூஞ்சோலையாக காணப்பட்டது. பகல் 12.30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணி…

செஞ்சோலை படுகொலையின் ஆறாத ரணங்கள்! 5

ஆக்கிரமிப்பு படைகளின் `புக்காரா’ விமானங்கள் குண்டுகளை மாறி மாறி கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத பிஞ்சுகள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்த கொலை வெறிபிடித்தவர்களின் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது 40 அப்பாவிகள் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர். இது பாடசாலை மாணவர்கள் படையினரால் கூண்டோடு அழிக்கப்பட்ட மற்றுமொரு சம்பவம். இதைவிட மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் ,வயோதிபர்களென எதுவித வேறுபாடுகளுமின்றி கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம். `குமுதினி’ படகில் ( நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்குமிடையில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள படகு) பயணித்த பலரை 1984 ஆம் ஆண்டு கடற்படை வெட்டியும் குத்தியும் கொன்றது.இதில் 6 மாத பச்சிளம் பாலகன் துப்பாக்கியிலுள்ள கத்தியால் கடற்படையினரால் குத்திக் கொலை செய்யப்பட்டான். மூன்று முறை அந்த பிஞ்சு நெஞ்சில் குத்தி கொன்ற கடற்படை இன்றும் தமிழர் தாயகத்திலேயே நிலை கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை அரசின் முப்படைகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் இழந்த உயிர்கள், உடைமைகள் ஏராளம். ஆனால் தமது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அதற்குப் பொய்யான,வொப்பான விளக்கங்களை பேரினவாதிகள் மாத்திரமன்றி சிங்களத்துவ ஊடகங்களும் கூறிவருகின்றன. இதற்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளதை பதிலாக முன்வைக்கலாம். ” இனவெறி – இதயமற்றோர் நடத்திய முல்லைத்தீவு படுகொலைக்கு சமாதானம் சொல்வது போன்ற சண்டாளத்தனம் கொடுமையானது”. இலங்கையில் நடைபெறும் அராஜகங்களுக்கு இந்த பழமொழியும் நன்றாக பொருந்தும் – “பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பதே அது. தமிழர் தாயகம் இழந்த எமது உறவுகள் அனைவரையும் எங்கள் உள்ளத்தில் மட்டுமல்ல இல்லத்திலும் நினைவில் நிறுத்தி வணக்கம் செய்வோம்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply