சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு 31,000 கடந்துள்ள நிலையில், குறிப்பிட்ட 5 மண்டலங்களில் மட்டுமே சுமார் 20,000 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் கடந்த மாதம் வரை தினமும் ஏற்படும் தொற்று எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், ஊரடங்கில் சற்று தளர்வு அளிக்கப்பட்ட பிறகு இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை நாள்தோறும் ஆயிரத்தை கடந்துள்ளது.
குறிப்பாக சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 5,000 தாண்டியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் 3,500 என்ற நிலையிலேயே இருந்த தொற்று பாதிப்பு, அடுத்தடுத்து அதிகரித்து தற்போது 5,000 கடந்துள்ளது. அதாவது, கடந்த 9 நாட்களில் மட்டும் சுமார் 1,500 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கு அடுத்ததாக தண்டையார்பேட்டை மண்டலத்திலும் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. தினமும் அங்கு சராசரியாக 150 முதல் 200 பேர் வரை புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஏற்கெனவே தொற்று பரவியவர்கள் மூலமே அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை மண்டலத்தில் கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த மண்டலத்தில் தொற்று எண்ணிக்கை 4,000 நெருங்கும் நிலையில், 9 நாட்களில் 1,407 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கோடம்பாக்கம் மண்டலத்திலும் நாள்தோறும் 150 முதல் 200 பேர் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த மண்டலத்தில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தொற்று கணிசமாக அதிகரித்துள்ளது.
புளியாந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய திருவிக நகர் மண்டலத்திலும் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. தினமும் அந்த மண்டலத்தில் 100 முதல் 150 பேர் வரை புதிதாக கொரோனா பிடிக்குள் சிக்குகின்றனர்.
இதேபோல், திருவொற்றியூர், அடையாறு, வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களும் தொற்று அதிகமாக உள்ள மண்டலங்களின் பட்டியலில் முதன்மையானதாக உள்ளது.