‘செல்பி’ மோகத்தால் பறிபோன உயிர்!

You are currently viewing ‘செல்பி’ மோகத்தால் பறிபோன உயிர்!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன. இந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றுவட்டாரக் கிராம பகுதிக்குள் நுழைந்தன. நேற்று காலை அந்தப் பகுதியில் ராம்குமார் (வயது 27) என்ற கோவில் பூசாரி ஒருவர் நடந்துபோனார். மேட்டுப்பட்டி அருகே மலை அடிவாரத்தில் போகும்போது அந்த வழியாக அந்த காட்டு யானைகள் வந்தன.

‘செல்பி’ ஆசை யானைகளை பார்த்ததும் அவருக்கு ‘செல்பி’ எடுக்கும் ஆசை வந்தது. உடனே தனது பாக்கெட்டில் இருந்து செல்போனை கையில் எடுத்து உயர்த்திப் பிடித்தபடி, யானை அருகே பின்நோக்கி நகர்ந்தார். அந்த நேரத்தில் 2 யானைகளில் ஒன்று வேகமாக ஓடிவந்தது. அது கண் இமைக்கும் நேரத்தில் அவரை, துதிக்கையால் தூக்கி வீசியது. உயிர் பறிபோனது அதில் நிலைகுலைந்து போன ராம்குமார் அலறினார்.

அடுத்த நொடியில் அவரை கால்களுக்கு அடியில் போட்டு மிதித்தது. இதில் ராம்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து செத்தார். யானை தாக்கி ராம்குமார் இறந்து கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வனத்துறைக்கும் பாரூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்குவந்த போலீசார் ராம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராம்குமாரின் தந்தை பெயர் எல்லப்பன் என்பதும், பாரூர் அருகே உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. ‘செல்பி’ எடுக்கும் மோகத்தில் ராம்குமார் உயிரை பறிகொடுத்த சம்பவம், அந்தப் பகுதியில் பரிதாபமாகப் பேசப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply