தமிழகத்தில் உயர் மின் அழுத்த கேபிள் அருகே செல்போன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் மீது மின்சாரம் பாய்ந்தது. சென்னை சானிடோரியம் உள்ள ஏற்றுமதி வளாகத்தில் வடமாநிலமான ஜார்க்கண்டை சேர்ந்த இளம்பெண்கள் பலர் விடுதியில் தங்கியபடி வேலை செய்கின்றனர்.
இந்த விடுதி அமைந்திருக்கிற இடத்துக்கு மிக அருகிலேயே துணை மின் நிலையத்துக்குச் செல்லும் உயர் அழுத்த மின்சார கேபிள் செல்கிறது. விடுதியில் கும்கும் குமார் (19) என்ற பெண் தங்கியிருந்தார். நேற்று காலை அவர் தனது செல்போனில் சார்ஜ் இல்லாததால் தனது பவர் பேங்கில் சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
அவர், உயர் அழுத்த மின்சார கேபிள் அருகில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கு காயப்போட்டிருந்த துணி கீழே விழுந்திருக்கிறது. அதை ஒரு பிளாஸ்டிக் சேர் போட்டு எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
அப்போது, உயர் அழுத்த மின்சார கேபிளிலிருந்து கும்கும் குமாரி மீது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். அப்போது அந்தக் கட்டடம் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததால் விடுதியிலிருந்து ஊர்மிளா குமாரி, பூனம் என்ற இரண்டு பெண்கள் மீதும் மின்சாரம் பாய்ந்திருக்கிறது.
பலத்த காயம் ஏற்பட்ட கும்கும் குமாரி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், இருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்து தொடர்பாக தாம்பரம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.